×

நாமக்கல் பகுதிகளில் காற்றில் சாய்ந்து விழுந்த மரங்கள் அகற்றம்

நாமக்கல், ஏப்.24: நாமக்கல் பகுதியில் காற்றில் சாய்ந்து விழுந்த மரங்களை நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் அகற்றினர். நாமக்கல் நகரில் கடந்த 3 நாட்களாக இரவில் பலத்த இடிமின்னல், காற்றுடன் மழை பெய்தது. இதன் காரணமாக, திருச்சி ரோட்டில், சாலையோரம் இருந்த 50 ஆண்டு பழமையான 6 புளியமரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தது. இரவு நேரங்களில் சாய்ந்து விழுந்ததால் யாருக்கும் ஆபத்து ஏற்படவில்லை. தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், சாலைப்பணியாளர்கள் மூலம் மரத்தை அப்புறப்படுத்தினர். இதையடுத்து, சாய்ந்து விழுந்த மரங்களை ஏலம் விட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘சாலையோரம் ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை முன் எச்சரிக்கையாக அகற்றி வருகிறோம். இது தொடர்பாக புகார்களை பொதுமக்கள் 04286 230351 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். தற்போது, கோடை மழை இரவில் தொடர்ந்து பெய்யும் நிலை உள்ளதால் பொதுமக்கள் மரங்களின் அடியில் ஒதுங்கவேண்டாம். இதேபோல், ஓட்டு கட்டிடங்கள், கூரைகளின் அருகிலும் மழைக்காக தங்கவேண்டாம். உறுதியான கான்கிரிட் கட்டிடங்களில் மட்டும் மழை நேரங்களில் பாதுகாப்புக்காக நிற்கலாம்’ என்றனர்.

Tags : areas ,Namakkal ,
× RELATED கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி;...