×

ஓசூர் பகுதியில் மா உற்பத்தி குறைந்தது

ஓசூர், ஏப்.24: ஓசூர் பகுதியில் கோடை தாக்கத்தின் காரணமாக, மா உற்பத்தி குறைந்து, விலை அதிகரித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி தாலுகாவில், ரோஜா மற்றும் மாம்பழங்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு, உற்பத்தி செய்யப்படும் ரோஜாவிற்கு வளைகுடா நாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. இங்கு விளையும் ரோஜா பூக்கள் காதலர் தினம், கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு நாட்களில் 2 கோடி பூக்களுக்கு மேல் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ரோஜாவிற்கு அடுத்தபடியாக மா உற்பத்தியும் செய்யப்பட்டு வருகிறது. மா உற்பத்தி அதிகரிக்கும்போது, காமன்தொட்டி, கோபசந்திரம், அத்திமுகம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் அதிகளவில் கடைகள் வைக்கப்பட்டு மாம்பழங்கள் விற்பனை செய்வது வழக்கம். தற்போது, கோடை அதிகரித்து வரும் நிலையில், விளைச்சல் இல்லாததால், விலை அதிகரித்து விற்பனை குறைந்துவிட்டதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.  

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், வழக்கமாக ஜனவரி மாதத்தில் மரத்தில் பூ பிடித்து மே மாதத்தில் மாம்பழங்கள் அறுவடை செய்யப்படும். ஆனால், இந்த முறை பருவமழை இல்லாமல், வெப்பம் அதிகரித்து, பூ பிடிப்பது தாமதமாக துவங்கியது. அதனால், மா சாகுபடியும் குறைந்து உள்ளது. இந்நிலையில், குறைந்த அளவில் மாம்பழங்கள் கிடைப்பதால் அதன் விலையும் அதிகரித்துள்ளது என்றனர்.   இதுகுறித்து உழவர் சந்தை உதவி வேளாண்மை அலுவலர் தமிழ்வேந்தன் கூறுகையில், ஓசூர் உழவர் சந்தைக்கு சூளகிரி, பேரிகை பகுதியிலிருந்து மாம்பழங்கள் வந்து கொண்டிருக்கிறது. செந்தூரம் கிலோ ₹40 முதல் ₹60க்கும், பங்கனப்பள்ளி ₹80 முதல் 100க்கும், மல்கோவா ₹80 முதல் ₹100க்கும், பாதாமி ₹80 முதல் ₹100க்கும் விற்பனையாகிறது என்றார்.

Tags : Hosur ,
× RELATED ஓசூர் மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு