×

சேலம் மாவட்டத்தில் சிறப்பு வகுப்பு நடத்திய 10 பள்ளிக்கு நோட்டீஸ்

சேலம், ஏப்.24: சேலம் மாவட்டத்தில் கோடை விடுமுறை அளிக்காமல் சிறப்பு வகுப்பு நடத்திய 10 தனியார் பள்ளிகளுக்கு, விளக்கம் கேட்டு நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் 1 முதல் பிளஸ் 2 வரை உள்ள அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகள் முடிந்து, கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. கோடை விடுமுறையில், எந்தவிதமான சிறப்பு வகுப்புகளும் மாணவர்களுக்கு நடத்தக்கூடாது என்று கடந்த சில ஆண்டுகளாக, தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே நடைமுறை நடப்பாண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அனைத்து மாவட்ட நிர்வாகங்கள் சார்பிலும், தனியார் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதனை மீறி சிறப்பு வகுப்புகள் நடத்தினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பள்ளிக்கல்வித்துறை உத்தரவுகளை காற்றில் பறக்கவிட்ட பல தனியார் பள்ளிகள், எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, கோடையிலும் சிறப்பு வகுப்புகளை நடத்தி வருகின்றன. இதுதொடர்பாக பெற்றோர் தரப்பில் இருந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனையடுத்து, மாவட்ட கல்வி அதிகாரிகள் நேரடியாக பள்ளிகளுக்கு ெசன்று ஆய்வு மேற்ெகாண்டு, சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள சேலம், சேலம் ஊரகம், ஆத்தூர், இடைப்பாடி, சங்ககிரி ஆகிய 5 கல்வி மாவட்ட அலுவலர்கள், அனைத்து பல்வேறு பள்ளிகளிலும் ஆய்வுகள் மேற்கொண்டனர். ஆய்வு மற்றும் பெற்றோர் தெரிவித்த புகாரின் அடிப்படையில், கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்திய 10 தனியார் பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து சி.இ.ஓ., கணேஷ்மூர்த்தி கூறுகையில், ‘‘அரசு உத்தரவையும் மீறி, சிறப்பு வகுப்பு நடத்திய பள்ளிகளுக்கு நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுடனான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது, கோடை விடுமுறையில் கட்டாயம் சிறப்பு வகுப்பு நடத்த கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவர்களை வைத்து விளம்பரம் செய்யவோ, பிளக்ஸ் பேனர் வைக்கவோ கூடாது, மறுகூட்டல் மற்றும் மதிப்பீடு கோரும் மாணவர்களின் விண்ணப்பங்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது,’’ என்றார்.  தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்துவது தொடர்பான புகார்களை, சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தை 0427-2450254 மற்றும் 94899 77200 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : schools ,Salem district ,
× RELATED நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக...