ஆளும்கட்சி ஆதரவாளர்கள் பரம்பிக்குளம்-ஆழியாறு கால்வாயில் தண்ணீர் திருட்டு

திருப்பூர், ஏப். 24:  பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன வாய்க்காலில் ஆளும்கட்சி ஆதரவாளர்கள் மோட்டார் வைத்து தண்ணீர் திருடுவதை தடுக்கும் அதிகாரிகள் மற்றும் போலீசாரை மிரட்டுவதால் கடைமடை விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து தமிழக முதல்வருக்கு பிஏபி பாசன சங்க விவசாயிகள் அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது: கோவை மாவட்டம் பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன வாய்க்கால் மூலம் பொள்ளாச்சி, உடுமலை, செஞ்சிமலை, ஜல்லிபட்டி, பல்லடம், குண்டடம், காங்கயம், வெள்ளகோவில், முத்தூர் உட்பட பல்வேறு கிராமங்களை ேசார்ந்த 3 லட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் விவசாய விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன திட்டத்தில் 4 மண்டலமாக பிரிப்பிக்கப்பட்டு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. ஒவ்வொரு மண்டலமாக தண்ணீர் விடும் போது ஏற்கனவே பயன்பெற்ற மண்டல விவசாயிகள் தண்ணீர் எடுக்ககூடாது என்பது விதி. இது குறித்து பொதுப்பணித்றை அதிகாரிகள் ஆய்வு செய்து தண்ணீர் திருட்டில் ஈடுபடும் விவசாயிகள் மீது போலீசில் புகார் கொடுத்து நடவடிக்கை எடுத்து வந்தனர்.

தற்போது ஆளும்கட்சி பிரமுகர்கள் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு தொகுதி எம்.பி., எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர், நகரம், ஒன்றிய செயலாளர்கள் ஆகியோர் ஆதரவாக செயல்படுகின்றனர். சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், போலீசாரை தரக்குறைவான வார்த்தைகளால் பேசுவதோடு, இடமாற்றம் செய்து தங்களுக்கு ஆதரவான அதிகாரிகளை நியமித்துக்கொள்கின்றனர். ஒரு சில அதிகாரிகள் தவறுகளை கண்டும் காணாமல் இருக்கின்றனர்.

இந்நிலையில், குண்டடம் கிளை கால்வாயில் பல இடங்களில் அத்து மீறி குழாய் பதித்து தண்ணீர் திருட்டில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகள் புகாரின் பேரில், பொதுப்பணித்துறை அதிகாரிகள், குழாய்களை அப்புறப்படுத்தினர். ஒருவர், குழாயை ஏன் அகற்ற வேண்டுமென, அதிகாரிகளை மிரட்டியுள்ளார். போலீசில் புகார் செய்தும், விரைவான நடவடிக்கை இல்லாத நிலையில், பொதுப்பணித்துறை அலுவலகத்தை, மர்ம நபர்கள் சூறையாடியுள்ளனர். போலீசார் யாரையும் தடுக்கவும் இல்லை; கைதும் செய்யவில்லை. கடந்த 22ம் தேதி திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழுவை சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட விவசாயிகள், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அப்போது கலெக்டர் பழனிசாமியிடம் நேரில் மனு அளித்தனர். இது குறித்து பாசன சங்க விவசாயிகள் கூறியதாவது: தண்ணீர் திருட்டில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுத்த அதிகாரிகளை மிரட்டியும், அலுவலகத்தை சேதப்படுத்தியது குறித்து போலீசில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால் பொதுப்பணித்துறையினர், இரவு ரோந்து பணிக்கு செல்வதில்லை. நான்காம் சுற்றுக்கு தண்ணீர் திறந்து, நான்கு நாட்களாகியும், கடைமடைக்கு தண்ணீர் இது வரை வரவில்லை. அனைத்து பயிர்களும் காய்ந்து வருகிறது. பொதுப்பணித்துறை அலுவலகத்தை சூறையாடிய நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். பிரம்பிக்குளம்-ஆழியாறு பாசன கால்வாயில் தண்ணீர் திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து கடைமடைக்கு தண்ணீர் கிடைக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: