அதிகாரிகள் மெத்தனம்

திருப்பூர், ஏப். 24:   திருப்பூர் மாநகரில் உள்ள ஓட்டல்களில் தரமற்ற முறையில் உணவு பண்டங்கள் தயாரிக்கப்படுவதாக புகார் எழுந்தும், நடவடிக்கை எடுக்காமல் உணவு பாதுகாப்புப் துறை அதிகாரிகள் மெத்தனமாக இருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.  திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பனியன் உற்பத்தி நிறுவனங்களும், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜாப்-ஒர்க் நிறுவனங்களும் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனங்களில் கட்டிங், பேட்லாக், ஓவர்லாக், போல்டிங், அயர்ன், மெசின், சிங்கர், பேக்கிங், செக்கிங், லேபிள், கைமடித்தல், டேமேஜ், அடுக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த தொழிலாளர்களில் பெரும்பான்மையினர் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள். இதில் வட மாநில தொழிலாளர்கள் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் திருப்பூரில் தனியாக வசித்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலானோர் ஓட்டல்களில் சாப்பிட்டு வருகின்றனர்.

இதன் காரணமாகவே, சிறிய அளவிலான ஓட்டல்கள், சாலையோர உணவு விடுதிகள் என ஏராளமாக உள்ளன. இதுபோன்ற ஓட்டல்கள், பெரும்பாலும் தரமற்ற பொருட்களை குறைந்த விலைக்கு வாங்கி, உணவு தயாரிப்பதாக புகார் எழுந்துள்ளது. ஆடு, கோழி போன்ற இறைச்சிகளை சமைக்கும் சில ஓட்டல்களில், பிரிட்ஜில் வைக்கப்பட்டு, ஐந்து நாட்களுக்கு மேலான இறைச்சி பயன்படுத்துவதால், இதை சாப்பிடும் தொழிலாளர்களுக்கு, வாந்தி, மயக்கம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. மேலும், சரியாக வேக வைக்கப்படாத இட்லி, சப்பாத்தி ஆகிய தரம் குறைந்த உணவுகளை ஓட்டல்களில் விற்கின்றனர்.  

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பல்லடம் பகுதிகளில் உள்ள கோழிப் பண்ணைகளில் இருந்து நோய்வாய்ப்பட்டு இறந்த கோழிகளை குறைந்த விலைக்கு வாங்கி வந்து, டாஸ்மாக் பார்கள் மற்றும் சாலையோர கடைகளுக்கு விற்பனை செய்ய வந்தவர்களை சோதனை சாவடிகளில் போலீசார் பிடித்து அவர்களை கைது செய்தனர். இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்தும், பல்வேறு தரப்பிலிருந்தும் புகார்கள் எழுந்தும், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஓட்டல்கள் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

எனவே இனியும் தாமதிக்காமல், தொழிலாளர்களின் நலனை கருத்தில்கொண்டு, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: