கோடை மழையால் நொய்யல் ஆற்றில் தண்ணீர் அதிகரிப்பு

காங்கயம், ஏப். 24:   கோவை, திருப்பூர் பகுதியில் பெய்து வரும் மழையால் நொய்யல் ஆற்றில் தண்ணீர் அதிகரித்துள்ளது. சாயப்பட்டறை நிறுவனங்கள் சாய நீரை ஆற்றில் திறந்து விடுவதால் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. கோவை, நீலகிரி மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. நொய்யல் ஆறு கோவை மாவட்டம் வெள்ளிங்கிரி மலையில் உற்பத்தியாகி திருப்பூர் ஈரோடு கரூர் மாவட்டங்கள் வழியாக 128 கி.மீ., பயணித்து காவிரியுடன் கலக்கிறது. திருப்பூர் சாயபட்டறைகளில் இருந்து திறந்து விடப்படும் சாய நீரால் நொய்யல் ஆறு வடிகாலாகவே மாறிப்போனது. கடந்த சில மாதங்களாக மழை பெய்யாமல் வறட்சி நிலவியது.

இதனால் நொய்யல் ஆற்றில் தண்ணீர் செல்வது படிப்படியாக குறைந்தது. இருப்பினும் திருப்பூர் சாய ஆலையில் இருந்து அவ்வப்போது தண்ணீர் திறந்து விட்டதால், சாய நீருடன் நல்ல தண்ணீரும் கலந்து யாருக்கும் பயனில்லாமல் சென்றது. இதனால் நீரில் டி.டி.எஸ்.2600க்கும் குறையாமல் இருந்து வந்தது. சாயநீர் கலப்பது தடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் நொய்யல் ஆற்று கரையோரத்தில் உள்ளவர்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அதிகாரிகள் யாரும் கனவத்தில் கொள்வதில்லை. ஆளும் கட்சி அமைச்சர்களும் இது பற்றி வாய்திறப்பது இல்லை.

தற்போது, கோவை திருப்பூர் போன்ற பகுதியில் கோடை மழை பெய்து வருவதால், நொய்யல் ஆற்றில் தண்ணீர் செல்வது அதிகரித்துள்ளது. இதை பயன்படுத்தி சில சாயப்பட்டறை நிறுவனங்கள் சுத்திகரிக்கப்படாத சாய நீரை ஆற்றில் திறந்து விட்டுள்ளனர். இதனால் நொய்யல் ஆற்றில் தண்ணீர் கருப்பு நிறத்தில் செல்கிறது. மேலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், சாய ஆலைகளை அதிகாரிகள் இடைவிடாமல் கண்காணித்து சாய நீர் திறந்து விடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: