தாழ்வாக கட்டிய சாக்கடை பாலத்தால் குடியிருப்புகளில் கழிவுநீர் புகுந்த அவலம் தொற்றுநோய் பரவும் அபாயம்

பொள்ளாச்சி, ஏப். 24:  பொள்ளாச்சியில், தாழ்வாக கட்டிய சாக்கடை பாலத்தால்  குடியிருப்புகளில் கழிவுநீர் புகுந்து, தொற்றுநோய்  பரவும் அபாயம் ஏற்படுவதாக, பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். பொள்ளாச்சியில் குடியிருப்புகள் அதிகம் உள்ள வார்டு பகுதியில் ஒன்றான 19 வார்டு கரிகால்சோழன் வீதி, ஆரோக்கியநாதர் வீதி உள்ளிட்ட பகுதி வழியாக செல்லும் சாக்கடை  பாலம் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த சாக்கடை  பாலம் கட்டப்பட்ட பாதைகளில் சிறுபாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், கரிகால்சோழன் வீதி வழியாக கழிவுநீர் செல்லும் சாக்கடையின் மேல் பகுதியில் உள்ள சிறுபாலமானது சேதமடைந்து காணப்பட்டது.  பாதாள சாக்கடை பணி துவங்கியபோது,  அப்பகுதியில பழுதான சிறுபாலம் அப்புறப்படுத்தப்பட்டு, புதிய பாலம் அமைக்கும் பணி நடைபெற்றது. சுமார் இரண்டு மாதத்திற்கு முன்பு துவங்கிய இப்பணி, சில நாட்களுக்கு முன்பு நிறைவடைந்தது. ஆனால், அந்த சாக்கடை பாலம் உயரம் இல்லாமல் மிகவும் தாழ்வாக கட்டப்பட்டுள்ளது.  

இதில் நேற்று முன்தினம் பெய்த மழைக்கு, அந்த கால்வாயில் மழைநீருடன் கழிவுபொருட்கள் கலந்து, கரிகால்சோழன் வீதியை தொட்டுள்ள குடியிருப்பு பகுதிக்கு சென்றுள்ளது. இதனால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், பாதாள சாக்கடைக்கு என தோண்டப்பட்ட பிரதான சாக்கடையை அடைத்தவாறு கிடப்பில் போடப்பட்டுள்ளது. நேற்று  காலை அதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து, நகராட்சி அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர்.    சம்பவ இடத்துக்கு சென்ற நகராட்சி  துப்புரவு பணியாளர்கள், கழிவு பொருட்களின் அடைப்பை  சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், கரிகால்சோழன் வீதியில் தாழ்வாக கட்டப்பட்ட கழிவுநீர் பாலத்தின் கீழ் பகுதியை ஆழப்படுத்துவதுடன், வருங்காலங்களில் குடியிருப்புகளில் கழிவுநீர் புகுவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>