இரண்டு மாதங்களுக்கு பிறகு குரங்கு அருவியில் தண்ணீர் வரத்து சுற்றுலா பயணிகளுக்கு தடை நீக்கம்

பொள்ளாச்சி, ஏப். 24:  பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கோடை மழையால் குரங்கு அருவியில் இரண்டு மாதங்களுக்கு பிறகு மீண்டும் தண்ணீர் வரத்து துவங்கியது, இதனால், அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

பொள்ளாச்சியை அடுத்த ஆழியாருக்கு வரும் சுற்றுலா பயணிகள் பலரும், அருகே வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குரங்கு அருவிக்கு சென்று குளித்து மகிழ்கின்றனர். கடந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழைக்கு பிறகு, இந்த ஆண்டில் சில  மாதங்களாக மழை  இல்லாததால், வறட்சி காரணமாக குரங்கு அருவியில் தண்ணீர் வரத்தின்றி வெறும் பாறையானது.   
Advertising
Advertising

இதனால் கடந்த மார்ச் மாதம் துவக்கத்திலிருந்து குரங்கு அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அங்கு வந்த சுற்றுலா பயணிகள்  ஏமாற்றத்தில் திரும்பி சென்றனர். இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கோடை மழையால், நேற்று அதிகாலையில்  குரங்கு அருவியில், இரண்டு மாதத்திற்கு பிறகு  மீண்டும் தண்ணீர் வரத்து துவங்கியது.    

அருவியில் தண்ணீர் வருவதையறிந்த வனத்துறையினர், சுற்றுலா பயணிகளுக்கான தடையை நீக்கி அங்கு குளிக்க அனுமதி அளித்தனர். இதை தொடர்ந்து  நேற்று காலை முதல் குரங்கு அருவிக்கு சுற்றுலா பயணிகள் வருகை இருந்தது. நேரம் செல்ல செல்ல சுற்றுலா பயணிகள் கூட்டம் மேலும் அதிகரித்தது. குரங்கு அருவியில் குளிக்கும் இடத்தில் புதிதாக தடுப்பு கம்பி ஏற்படுத்தப்பட்டதால், சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் குளித்து மகிழ்ந்தனர். பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், வரும் நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories: