×

ஒரு மாதத்திற்கு பிறகு திப்பம்பட்டி சந்தையில் மாடு விற்பனை விறுவிறுப்பு

பொள்ளாச்சி, ஏப். 24:   பொள்ளாச்சி காந்தி மார்க்கெட் அருகே  நகராட்சி இடத்தில் உள்ள மாட்டு சந்தைக்கு மாடுகளை விற்பனை செய்து வந்த வியாபாரிகள், கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் திப்பம்பட்டியில்  ஆரம்பிக்கப்பட்ட மாட்டு சந்தைக்கு மாடுகளை விற்பனைக்காக  கொண்டுவர ஆரம்பித்தனர். இதனால், நகராட்சி மாட்டு சந்தைக்கு மாடுகள் வரத்தின்றி கடந்த சில மாதமாக நின்றுபோனது. திப்பம்பட்டியில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் நடந்த சந்தை நாளில், சுற்றுவட்டார கிராம பகுதி மற்றும்  ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் மாடுகள் விற்பனைக்கு அதிகளவில் கொண்டு வரப்பட்டன. அதனை கேரள வியாபாரிகளே அதிகம் வாங்கி சென்றனர்.
 
புனித வெள்ளி நோன்பு கடைபிடிப்பால், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக திப்பம்பட்டி சந்தைக்கு மாடுகள் வரத்து ஓரளவு இருந்தாலும்,  கேரள வியாபாரிகள் வருகை மிகவும் குறைவால், மாடு விற்பனை மந்தமாகி, பெரும்பாலான மாடுகள் மிகவும்  குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. கிறிஸ்தவர்களின் தவக்காலம் கடைபிடிப்பு நிறைவால், இந்த வாரத்தில் சந்தை நாளான நேற்று நடந்த சந்தைக்கு மீண்டும் மாடுகள் வரத்து அதிகமாக இருந்தது. அதிலும் ஆந்திரா காளைகள் வரத்து கூடுதல் எண்ணிக்கையில் இருந்துள்ளது. மாடுகளை வாங்க, தமிழகத்தின் பல்வேறு மாவட்டம் மற்றும் கேரள மாநில வியாபாரிகள் அதிகளவு கூடியதால் விற்பனை விறுவிறுப்புடன் நடந்தது.   இதில் கடந்த வாரம் வரை காளை மாடு ரூ.24ஆயிரம் முதல் ரூ.26ஆயிரத்துக்கும்.

எருமை மாடு ரூ.26ஆயிரம் முதல் ரூ.28 ஆயிரத்துக்கும். பசுமாடு சுமார் 25 ஆயிரத்துக்கு  விற்பனையானது.  ஆனால் நேற்று சந்தையின்போது, காளை மாடு ரூ.30 ஆயிரம் வரையிலும், எருமைமாடு ரூ.32 ஆயிரம் வரையிலும். பசுமாடு ரூ.28 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரையிலும், ஆந்திரா மாடு ரூ.40 ஆயிரம் வரையிலும்,  கன்று குட்டிகள் ரூ.12 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையிலும் என கூடுதல் விலைக்கு விற்பனையாகியுள்ளது என்று, வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags : Thampampatti ,
× RELATED புனிதவெள்ளி நோன்பு கடைபிடிப்பால்...