×

மஞ்சூர் - கோவை இடையே இயக்கப்படும் அரசு பஸ் பழுது

ஊட்டி, ஏப். 24: மஞ்சூரில் இருந்து கோவைக்கு தினசரி காலை 6.45 மணிக்கு செல்லும் அரசு பஸ் அடிக்கடி பழுதாவதால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகேயுள்ள மஞ்சூர் சுற்று வட்டார பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் காரமடை, கோவை போன்ற சமவெளி பகுதிகளுக்கு கெத்தை, வெள்ளிங்காடு செல்லும் சாலையை பயன்படுத்துகின்றனர். இச்சாைல வழியாக ஊட்டி கிளையில் இருந்து இரண்டு அரசு பஸ்களும், மேட்டுபாளையம் கிளையில் இருந்து ஒரு பஸ்சும் இயக்கப்படுகிறது. கெத்தை முதல் வெள்ளியங்காடு வரை சாலை மிகவும் குண்டும் குழியுமாக உள்ளதால் பஸ்கள் பழுதடைவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் கீழ்குந்தா கிராமத்தில் இருந்து கோவைக்கு தினசரி காலை 6.45 மணிக்கு இயக்கப்படும் அரசு பஸ் நேற்று காலை ஓணிக்கண்டி பகுதி அருகே செல்லும் போது பேன் பெல்ட் அறுந்து பழுதாகி வழியிலேயே நின்று விட்டது. இதனால் கோைவ செல்ல கூடிய பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

இதனை தொடர்ந்து கெத்தையில் இருந்து ஊட்டி நோக்கி வந்த அரசு பஸ்சை கோவைக்கு மாற்றி விட்டனர். இதனால் ஊட்டி செல்வதற்காக மஞ்சூரில் காத்திருந்த பயணிகள் பஸ் வராததால் கடும் அவதிக்குள்ளாகினார்கள். பின்னர் ஊட்டியில் இருந்து மெக்கானிக் வரவழைக்கப்பட்டு பழுதடைந்த பஸ் சரி செய்யப்பட்டு 10 மணியளவில் ஊட்டிக்கு புறப்பட்டு சென்றது. கோவை செல்லும் பஸ்சில் உள்ள பழுதுகளை முறையாக சரி செய்து தராமல், பழுதடைந்து பாதி வழியில் நிற்கும் போது கெத்தையில் இருந்து ஊட்டி செல்லும் அரசு பஸ்சை மாற்றி கோவைக்கு இயக்குவதால் ஊட்டி - மஞ்சூர் வழித்தடத்தில் காலை நேரத்தில் போதிய பஸ்கள் இல்லாமல் போவதுடன் வருவாயும் பாதிக்கிறது. எனவே கீழ்குந்தா-கோவை அரசு பஸ்சை பழுதுகள் உள்ளதா என கிளையிலேயே சோதனை செய்து அனுப்ப வேண்டும். கெத்தைக்கு இயக்கப்படும் பஸ்சை வேறு பகுதிகளுக்கு அனுப்பாமல் முறையாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags : Manchur - Coimbatore ,
× RELATED மஞ்சூர்-கோவை சாலையில் காட்டு யானைகள் உலா