குடிநீர் பிரச்னைகளுக்கு தீர்வு காண தேர்தல் நடத்தை விதியில் தளர்வு செய்ய கோரிக்கை

ஈரோடு, ஏப். 24:  தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் மாதம் 10ம் தேதி மக்களவை தேர்தல் தேதியை வெளியிட்டது. அறிவிப்பு வெளியிட்டதையடுத்து அன்று முதலே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. புதிய திட்டங்களை அரசு அறிவிக்கவோ அல்லது மக்களிடம் குறைகேட்பு கூட்டம் நடத்தவோ தடை விதிக்கப்பட்டது. நடத்தை விதிமுறை பொதுவாக வாக்குபதிவு முடியும் வரை முழுமையாக அமலில் இருக்கும். பின்னர் குடிநீர் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்காக விதிமுறைகளில் இருந்து விலக்கு அளிக்கப்படும். ஆனால், தமிழகத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளதை கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையம் இந்த முறை தேர்தல் நடத்தை விதிமுறையில் தளர்வு செய்யவில்லை.

இந்நிலையில், குடிநீர் பிரச்னைக்கு தீர்வு உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலையில் மாவட்ட நிர்வாகம் திணறி வருகிறது. மாவட்டம் முழுவதும் கடந்த 4 நாட்களாக பரவலாக கோடை மழை பெய்து வந்த போதிலும் வறட்சி என்பது முழுமையாக நீங்க வாய்ப்பில்லை. ஏனெனில் மாலை, இரவு நேரங்களில் மழை பெய்த போதிலும், பகல் நேரத்தில் கொளுத்தும் வெயிலால் குடிநீர் பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே குடிநீர் தட்டுப்பாடு உள்ள இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைப்பது அவசியமாகிறது. இதே போல பழுதான மின் மோட்டார்களை சரிசெய்வது, நீர் குறைந்த கிணறுகளை ஆழப்படுத்துவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள வேண்டி உள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகளில் குடிநீர் பிரச்னை தொடர்பான பணிகள் மேற்கொள்ள விதிவிலக்கு அளிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: