×

ஹலோ சீனியர்ஸ் திட்டத்தில் 238 அழைப்புகளுக்கு தீர்வு

ஈரோடு, ஏப். 24: ஈரோடு மாவட்ட எஸ்.பி.சக்திகணேசன் கூறியதாவது: ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் ஹலோ சீனியர்ஸ் என்ற திட்டம் கடந்த ஜனவரி 15ம்தேதி தமிழகத்திலேயே முதல்முறையாக ஈரோட்டில் துவங்கப்பட்டது. இந்த திட்டத்தின்கீழ் ஏப்ரல் மாதத்தில் 249 அழைப்பு பெறப்பட்டது. பெறப்பட்ட அழைப்புகளில் குடும்ப தகராறு குறித்து 69 அழைப்பும், சொத்து தகராறு குறித்து 27 அழைப்பும், திருட்டு சம்பவம் குறித்து 5 அழைப்பும், வாய்த்தகராறு குறித்து 27 அழைப்பும், ஏமாற்றுதல் தொடர்பாக 17 அழைப்பும், இதர பிரச்னைகள் குறித்து 72 அழைப்பும், இந்த திட்டத்திற்கு நன்றி தெரிவித்து 32 அழைப்பும் வந்தது.வெளி மாவட்டத்தில் இருந்தும் அழைப்பு வந்தது.

அதன்படி கரூர், விழுப்புரம், சென்னை ஆகிய பகுதிகளில் இருந்து தலா ஒரு அழைப்பும், சேலம், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து 2 அழைப்பும், கோவை மாவட்டத்தில் இருந்து 4 அழைப்பும், திருப்பூர் மாவட்டத்தில் இருந்து 5 அழைப்பும் வந்தது. வெளி மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட அழைப்பு தொடர்பாக சம்பந்தப்பட்ட மாவட்ட காவல்துறையை அணுகி நிவாரணம் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் 20 வயது முதல் 90 வயது வரை உள்ளவர்கள் இந்த திட்டத்தில் அழைத்தனர்.

இதில் அதிகபட்சமாக 61 வயது முதல் 70 வயது வரை உள்ளவர்கள் 76 புகார் அளித்துள்ளனர். ஹலோ சீனியர்ஸ் திட்டத்தில் பெறப்பட்ட 249 அழைப்புகளில் 238 அழைப்புகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 11 அழைப்புகளின் மீதான நடவடிக்கை நிலுவையில் உள்ளது.  இந்த திட்டத்தில் பயன் பெற முதியவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கு 9655888100 என்ற செல்போன் மூலம் காவல்துறையை அணுகி உரிய தீர்வு பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : hello seniors ,
× RELATED அவிநாசிலிங்கேசுவரர் கோயில் திருவிழா; சுவாமி புறப்பாடு