×

குறுகிய காலத்திற்கு ஏற்ற பயறு வகை சாகுபடி

ஈரோடு, ஏப். 24: குறுகிய காலத்தில் நல்ல மகசூல் கொடுக்கும் பயறு வகை சாகுபடிக்கு விவசாயிகள் மாற வேண்டும் என்று வேளாண் அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர். இது குறித்து கோபி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ஆசைத்தம்பி கூறியிருப்பதாவது: பயறு வகைகள் பொதுவாக குறுகிய கால வயதுடையவை. அதிக பாசனநீர் தேவைப்படாதவை. பயறு வகை சாகுபடியில் சராசரியாக ஒரு எக்டருக்கு 544 கிலோ மகசூல் பெறப்படுகிறது. ஒரு எக்டரில் 800 கிலோ மகசூல் எடுக்க பல்வேறு திட்டங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோபி வட்டாரத்தில் ஒரு ஏக்கரில் 730 கிலோ மகசூல் எடுக்கப்பட்டுள்ளது.

துவரை, கொள்ளு, உளுந்து, பாசிபயறு, தட்டை, சோயாமொச்சை போன்றவை பயறு வகைப் பயிர்களின் வேர் முடிச்சுகள் மூலமாக ஆகாயத்தில் உள்ள தழைச்சத்து கிரகிக்கப்பட்டு நிலத்தில் சோ்க்கப்படுவதால் நிலவளம் மேம்படுகிறது. பயறு வகைப் பயிர்களின் இலைகள் நிலத்தில் உதிர்வதால் மண்ணில் அங்ககப் பொருள் அதிகரிக்கிறது. குறைந்த நாளில், குறைந்த செலவில் அதிக வருவாய் கிடைக்கிறது. பருவத்திற்கேற்ற உயர் விளைச்சல் தரும் ரகங்களை தேர்வு செய்து சாகுபடி செய்தால் குறுகிய நாட்களில் நல்ல வருமானத்தை விவசாயிகள் பெற முடியும். குறிப்பாக, விதை நேர்த்தி செய்வது அவசியமாகும். இதே போல உரிய காலத்தில் களை நிர்வாகம் மேற்கொள்ளுதல், முறையான நீர் நிர்வாகம் மேற்கொள்ளுதல் உள்ளிட்டவை மேற்கொள்ளும்போது கூடுதல் மகசூல் எளிதில் எடுக்க முடியும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED அவிநாசிலிங்கேசுவரர் கோயில் திருவிழா; சுவாமி புறப்பாடு