×

மழைநீர் வீடுகளுக்குள் புகுவதை தடுக்க சாக்கடை அடைப்பு நீக்க உத்தரவு

ஈரோடு, ஏப். 24: ஈரோடு மாநகராட்சி பகுதியில் சாக்கடை கால்வாய் அடைப்பால் வீட்டிற்குள் மழைநீர் சாக்கடை நீருடன் கலந்து புகுந்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும், மாநகராட்சி பகுதிகளில் மழைக்காலங்களில் சாக்கடை அடைப்பு ஏற்பட்டு பாதிப்பு ஏற்படும் பகுதிகளாக 13 இடங்கள் கண்டறியப்பட்டு அந்த இடங்களில் அடைப்பை நீக்க பணியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் 60 வார்டுகள் உள்ளன.

ஈரோடு நகராட்சியாக இருந்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் துப்புரவு பணியாளர் பற்றாக்குறை இருந்து வருகிறது. தற்போதுள்ள துப்புரவு பணியாளர்களும் வீடு, வீடாக சென்று குப்பைகளை சேகரித்து வரும் நிலையில் ஆட்கள் பற்றாக்குறையால் தெருவோரங்களில் உள்ள குப்பை தொட்டிகளில் குப்பை அள்ள ஆட்கள் இல்லாத நிலை தொடர்ந்து வருகிறது. மாநகரின் முக்கிய இடங்களில் உள்ள சாக்கடை கால்வாய்களில் பொதுமக்கள் காய்கறி கழிவு, பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டுகின்றனர். இதனால், மழைக்காலங்களில் சாக்கடைநீர் செல்லும் இடங்களில் அடைப்பு ஏற்பட்டு மழைநீர் சாக்கடை நீருடன் கலந்து வீட்டிற்குள் புகுந்து விடுகிறது.  இதனால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் மாநகரில் உள்ள சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் தண்ணீர் தேங்கி வருகிறது. ஒரு சில பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீருடன் கழிவுநீரும் புகுந்துவிடுகிறது. இதனால், மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தலைமையில் அதிகாரிகள் நேற்று  திடீர் ஆய்வு மேற்கொண்டனர். மாநகராட்சிக்குட்பட்ட நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட், கிருஷ்ணர் தியேட்டர், வாட்டர் ஆபீஸ் ரோடு, இந்திராநகர், சூரம்பட்டி அணைக்கட்டு ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
எந்தெந்த இடங்களில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து பாதிப்பு ஏற்படுத்தும் என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். கடந்த 2017ம் ஆண்டு பெய்த மழையால் மாநகராட்சி பகுதிகளில் 13 இடங்களில் பாதிப்பு ஏற்பட்டது.

அந்த இடங்களில் தற்போது சாக்கடை அடைப்பு ஏற்படாதவாறு அடைப்புகளை எடுக்க துப்புரவு பணியாளர்களுக்கு ஆணையாளர் இளங்கோவன் உத்தரவிட்டார். மேலும், வைராபாளையத்தில் உள்ள குப்பை கிடங்கில் குப்பைகள் தரம் பிரிக்கும் பணியையும் பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி பொறியாளர் மதுரம், செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி செயற்பொறியாளர் கோபிநாத், சுகாதார அலுவலர் தங்கராஜ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறுகையில்,`மாநகராட்சி பகுதிகளில் மழைக்காலங்களில் அதிக பாதிப்பு உள்ள பகுதிகளாக 13 இடங்கள் கண்டறியப்பட்டு அந்த இடங்களில் சாக்கடை அடைப்பு ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், மாநகராட்சி பகுதிகளில் சாக்கடை கால்வாய்களில் குப்பை அதிகமாக சேருவதை தடுக்கும் வகையில் கம்பி வலைகள் அமைக்கப்பட உள்ளது.  தற்போது மழை தொடங்கியுள்ள நிலையில் இரவு நேரத்தில் சாக்கடை அடைப்பு ஏற்பட்டு மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து விடுவதாக தகவல் வந்தால் உடனடியாக அங்கு சென்று அடைப்பை அகற்ற ஒரு ஜேசிபி இயந்திரத்துடன் 10 துப்புரவு பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர் என்றார்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில்

Tags :
× RELATED ஈரோட்டில் தேர்தலுக்கு தேவையான...