×

வண்ணபூரணி வனசுற்றுலா திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை

சத்தியமங்கலம், ஏப்.24: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மழை துவங்கி உள்ளதால் வண்ணபூரணி வனசுற்றுலா திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, மான், காட்டுப்பன்றி, செந்நாய், கழுதைப்புலி உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வசிக்கின்றன. வனஉயிரின சரணாலயமாக இருந்த இந்த வனப்பகுதி கடந்த 2013ம் ஆண்டு புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து புலிகள் காப்பகத்திற்கான திட்டங்கள் ஒவ்வொன்றாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந் நிலையில் புலிகள் காப்பகத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்கு பயணிகளை அழைத்துச்செல்வதற்காக வண்ணபூரணி வனசுற்றுலா திட்டம் கடந்த 2017ம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

புலிகள் காப்பகத்தில் உள்ள சத்தியமங்கலம், பவானிசாகர், தலமலை, ஆசனூர், கேர்மாளம், தாளவாடி ஆகிய 6 வனச்சரகங்களிலும் தனித்தனியாக வேன் மற்றும் ஜீப் உள்ளிட்ட வாகனங்களில் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை மற்றும் மாலை என இருமுறை பயணிகளை அழைத்துச்சென்று வனப்பகுதியை பார்வையிட அனுமதிக்கப்படுகிறது. இதற்காக  தாளவாடி வனச்சரகத்திற்குட்பட்ட முதியனூரிலிருந்து ஜூரகள்ளி வரை பயணிக்க ஒரு நபருக்கு ரூ.650ம், தலமலை வனச்சரகத்திற்குட்பட்ட திம்பத்திலிருந்து திப்புசுல்தான் கண்காணிப்பு கோபுரம் வரை பயணிக்க ரூ.500ம், ஆசனூர் வனச்சரகத்திற்குட்பட்ட ஆசனூரிலிருந்து ஹூலிகெரப்பட்டி வரை பயணிக்க ரூ.650ம், பவானிசாகர் வனச்சரகத்திற்குட்பட்ட காராச்சிக்கொரை வனசோனைச் சாவடியில் இருந்து தெங்குமரஹாடா வரை பயணிக்க ரூ.650ம், சத்தியமங்கலம் வனச்சரகத்திற்குட்பட்ட திம்பத்திலிருந்து கோட்டாடை பிரிவு வரை பயணிக்க ரூ.650ம், கேர்மாளத்திலிருந்து சூட்டிங் லாட்ஜ் ரோடு வரை பயணிக்க ரூ.650ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் முன்பதிவு வசதி உள்ளதால் முன்பதிவு செய்தும் சுற்றுலாப்பயணிகள் நேரடியாக வனத்துறை அலுவலகத்தை தொடர்புகொண்டு வனச்சுற்றுலா சென்று வந்தனர். இந்நிலையில்  சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் கடந்த 3 மாதமாக கடும் வறட்சி நிலவியது. இதனால், மரங்கள், செடிகொடிகள் காய்ந்து பசுமையான சூழல் மாறிவிட்டதால் மார்ச் மாதம் முதல் வனச்சுற்றுலா திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக சத்தியமங்கலம் புலிகள் காப்பக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். கடந்த சில நாட்களாக புலிகள் காப்பக வனப்பகுதியில் மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளது. தற்போது பள்ளிகளில் கோடை விடுமுறை விடப்பட்டதால் மீண்டும் வனச்சுற்றுலா தொடங்க வேண்டும் என சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்த 2 மையங்கள் அமைப்பு