×

மின்விளக்குகள் பொருத்தாததால் இருள் சூழும் ரயில்வே மேம்பாலம் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம்

விருதுநகர், ஏப். 24: விருதுநகர் ராமமூர்த்தி ரோடு ரயில்வே மேம்பாலத்தில் மின்விளக்குகள் பொருத்ததால், இரவு நேரங்களில் மேம்பாலம் இருளில் மூழ்குகிறது. இதனால், வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகரில் நகர் மையப்பகுதியில் ரயில்வே லைன் செல்கிறது. இதன் வழியாக தினசரி 70க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று வருகின்றன. இதனால், தினசரி 10 மணி நேரம் ரயில்வே கேட்டுகள் மூடப்படுகின்றன. இந்த சமயங்களில் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் காத்துக்கிடந்தனர். இதனை மாற்ற ராமமூர்த்தி ரோட்டில் ரயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் நீண்ட நாளாக கோரிக்கை விடுத்தனர். இதனையேற்று ரூ.20.53 கோடியில் மேம்பாலம் கட்டுவதற்கு 2008ல் அனுமதிக்கப்பட்டது.

மேம்பாலம், தரைப்பால பிரச்சனையால் 8 ஆண்டுகளுக்கு பிறகு 4.3.16ல் பாலம் கட்டுமான பணிகளை தொடங்கியது. 18 மாதத்தில் கட்டி திறக்க வேண்டிய பாலம் 37 மாதங்களை கடந்தும் ஆமை வேகத்தில் நடந்து வந்தது. மேம்பால பணிகள் முடிவடைந்த நிலையில் பாலத்திற்கு கீழ் ரோடு வேலைகள் நடப்பதால் மக்கள் பயன்பாட்டிற்கு கடந்த மார்ச் 15ம் தேதி திறக்கப்பட்டது. போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்டதால், விருதுநகர் மக்கள் ரயில்வே கேட்டுகளில் தவமிருந்த நிலை மாறியதால் மகிழ்ச்சியில் உள்ளனர். மேம்பாலத்தில் ரூ.50 லட்சத்தில் 140 வாட்ஸ் எல்இடி விளக்குகள் 50, 80 வாட்ஸ் சோலார் விளக்குகள் 8, சர்வீஸ் ரோட்டில் 140 வாட்ஸ் எல்இடி விளக்குகள் 16 அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒப்பந்த எடுத்த நிறுவனத்தினர் மின்விளக்கு அமைக்கும் பணியை துவக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. மின்விளக்குகள் இல்லாததால் இரவு நேரத்தில் மேம்பாலம் இருள் சூழந்து கிடக்கிறது. பாலத்தின் எதிர்பகுதியில் இருந்து வரும் வாகனங்களின் ஒளி கண்களை கூசும் அளவிற்கு இருப்பதால் விபத்து அபாயம் உள்ளது.

ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

நேற்று முன்தினம் மாலை 7 மணியளவில், பாலத்தின் இருபுறமும் கனரக வாகனங்களின் ஆக்கிரமிப்பால், சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த விருதுநகர் போக்குவரத்து போலீசார், போக்குவரத்தை சீரமைத்து வாகனங்களை அனுப்பி வைத்தனர். எனவே, மாவட்ட நிர்வாகம் மேம்பாலத்தில் மின்விளக்கு அமைக்க ஒப்பந்த எடுத்த நிறுவனத்தை போர்கால அடிப்படையில் மின்விளக்குகள் அமைக்க உத்தரவிட வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : motorists ,
× RELATED திருப்பதிசாரம் டோல்கேட்டில் கட்டணம் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி