×

நிதி பற்றாக்குறையால் சாத்தூரில் ஆமை வேகத்தில் நகரும் நகராட்சி அலுவலக கட்டுமானப் பணி

சாத்தூர், ஏப். 24: சாத்தூரில் நிதி பற்றாக்குறையால் நகராட்சிக்கு புதிய அலுவலகம் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. சாத்தூர் பெருமாள் கோயில் தெருவில் நகராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. குறுகிய இடத்தில் அனைத்து பிரிவுகளும் செயல்படுவதால், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து சாத்தூர் நகராட்சி அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு நகராட்சி அதிகாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையேற்று, சாத்தூர் மெஜூரா கோட்ஸ் காலனியில், நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் அனைத்து வசதிகளுடன் நகராட்சி அலுவலகத்திற்கு, புதிய கட்டிடம் கட்டுவதற்கு முடிவானது. இதற்காக தமிழக அரசிடம் இருந்து ரூ.2.70 கோடி நிதி பெறப்பட்டது. கட்டுமானப் பணிக்காக, டெண்டர் விடப்பட்டு கடந்த ஓராண்டாக பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆரம்பத்தில் விறுவிறுவென தொடங்கிய பணி, தற்போது தொய்வடைந்துள்ளது.

கட்டுமானப் பணிக்கு காலக்கெடு முடிந்தும் ஆமை வேகத்தில் பணி நடைபெற்று வருகிறது. எனவே, நகராட்சிக்கான புதிய கட்டிடப் பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து ஒப்பந்ததாரரிடம் கேட்டபோது, ‘சாத்தூர் நகராட்சி அலுவலகத்திற்கான புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. நகராட்சியில் நிதி பற்றாகுறை காரணமாக தொகை முறையாக வழங்கப்படவில்லை. இதனால், கட்டடப் பணிகள் தாமதமாகிறது மேலும், மணல் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களாலும் பணிகள் சுணங்குக்கின்றன. டிசம்பர் மாதத்துக்குள் பணிகள் முடிக்கப்படும்’ என்றார். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில்: நகராட்சிக்கான புதிய கட்டடப் பணிகள் வழக்கம் போல் நடைபெற்று வருகின்றன. அனைத்து பணிகளும் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது‘ என்றனர்.

Tags : office moves ,
× RELATED செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சிக்கு...