×

சாத்தூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதி

சாத்தூர், ஏப். 24: சாத்தூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர் பற்றாக்குறையால், நோயாளிகள் அவதிப்படுகின்றனர். மேலும், மருத்துவமனை இருபிரிவாக இருப்பதால், நோயாளிகளும், மருத்துவர்களும் இங்கும், அங்கும் அலைகின்றனர். இதனை தவிர்க்க புதிய அரசு மருத்துவமனையில் அனைத்து பிரிவுகளையும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சாத்தூரில் உள்ள பிரதான சாலையில் பழைய அரசு மருத்துவமனை மற்றும் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் புதிய அரசு மருத்துவமனையும் செயல்பட்டு வருகின்றன. பழைய அரசு மருத்துவமனையில் குழந்தைகள் வார்டு, பிரசவ வார்டு, எக்ஸ்ரே பிரிவு ஆகியவை உள்ளன. புதிய அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகள் மற்றும் புறநோயாளிகள் பிரிவு, ரத்தப் பரிசோதனை நிலையம், பிரேத பரிசோதனை, அவசர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட பல பிரிவுகள் உள்ளன. இரு மருத்துவமனைகளிலும், தினமும் 100க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

இரு மருத்துவமனைகளிலும் 19 மருத்துவர்கள் இருக்க வேண்டிய நிலையில், தற்போது 5 மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். மருத்துவர்களும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இங்கும், அங்கும் அலைகின்றனர். புதிய மருத்துவமனையில் புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் நேரத்தில், பிரசவ வார்டு மற்றும் குழந்தைகள் பிரிவின் அவசர தேவைகளுக்காக பழைய மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அடிக்கடி செல்கின்றனர். மேலும் எக்ஸ்ரே மற்றும் ரத்தப் பரிசோதனை நிலையம் ஆகியவை வெவ்வேறு இடங்களில் இருப்பதால், நோயாளிகள் இரண்டு மருத்துவமனைகளுக்கும் அலைகின்றனர். எனவே, சாத்தூர் புதிய அரசு மருத்துவமனையில் அனைத்துப் பிரிவுகளும் செயல்பட நடவடிக்கை எடுக்கவும், போதிய மருத்துவர்களை நியமிக்கவும் மாவட்ட சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : doctor ,Sattur Government Hospital ,
× RELATED மதுரையில் மருத்துவம் படிக்காமல்...