×

கோர்ட்டிலேயே கொலைமிரட்டல்: வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டம்

தேனி, ஏப்.24:  தேனியில் உள்ள உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு சம்பந்தமாக வாதாடிய வக்கீலை மிரட்டியவர்களை கைது செய்ய வலியுறுத்தி வக்கீல்கள் கோர்ட் முன்பாக உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இந்நீதிமன்றத்தில் ஒரு சொத்து சம்பந்தமான வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் ஒரு தரப்புக்கு ஆதரவாக வக்கீல் புகழேந்தி வாதிட்டார். அப்போது, நீதிமன்றத்தில் வழக்கு சம்பந்தமாக வந்திருந்த தேனியை சேர்ந்த சின்னச்சாமி வக்கீலை இந்த வழக்கில் ஆஜராகக் கூடாது எனவும் மீறினால் கொலைசெய்து விடுவோம் எனவும் மிரட்டினார்.  

இது குறித்து வக்கீல் புகழேந்தி,  தென்கரை போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் கடந்த வாரம் கோர்ட் முன்பாக தேனி வக்கீல் சங்கத்தின் சார்பில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இதனையடுத்து தென்கரை போலீசார் சின்னச்சாமி மீது வழக்குப்பதிவு செய்தபோதிலும் கைது செய்யவில்லை. வக்கீலை மிரட்டியவர்களை கைது செய்யாமல் மெத்தனப்போக்கோடு செயல்படும் தென்கரை போலீசாரை கண்டித்து தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பாக நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. தேனி வக்கீல் சங்கத் தலைவர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஜெயக்குமார், இணை செயலாளர் அழகேந்திரன், காண்டீபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Court ,hunger strike ,Attorneys ,
× RELATED தமிழ்நாட்டில் உள்ள அனைத்து...