×

பயணிகள் பரிதவிப்பு கலெக்டர் ஆபீஸில் நிற்காத அரசுபஸ்கள் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

தேனி, ஏப்.24:  தேனி கலெக்டர் அலுவலகத்தில் அரசு பஸ்கள் நிற்க மறுப்பதால் பயணிகள் தவிக்கும் நிலை உள்ளது. தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம், தேனியில் இருந்து மதுரை செல்லும் சாலையில் கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ளது. இந்த அலுவலகத்தில் வருவாய்த்துறை, பிற்பட்டோர் நலத் துறை, ஆதி திராவிடர் நலத் துறை, ஊரக வளர்ச்சி முகமை, தாட்கோ, மாவட்ட வழங்கல் அலுவலகம், மாவட்ட கருவூலம் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகத்திற்கு திங்கள் கிழமை தோறும் நடக்கும் மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். மேலும், அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் தினமும் அலுவலக வளாகத்திற்கு வருகின்றனர்.

கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள போலீஸ் எஸ்.பி அலுவலகம், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அலுவலகம், அனைத்து மகளிர் காவல் நிலையம் உள்ளிட்டவற்றிற்கும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கலெக்டர் அலுவலக வளாகம் தேனி புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து சுமார் 1.5 கிமீ தொலைவில் உள்ளது. புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து மதுரை செல்லக்கூடிய அனைத்து பேருந்துகளும் கலெக்டர் அலுவலகத்தை கடந்தே செல்ல வேண்டும். ஆனால், மதுரை செல்லக்கூடிய அரசு பேருந்துகளில் கலெக்டர் அலுவலகம் செல்ல பயணிகளை ஏற்ற பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுனர்கள் முன்வருவதில்லை. இதனால், கலெக்டர் அலுவலகம் வழியாக ஆண்டிபட்டி செல்லும் டவுன்பஸ்கள் வரும் வரை கலெக்டர் அலுவலக வளாகம் செல்ல வேண்டியவர்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.

புதிய பஸ் நிலையத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் வழியாக செல்லும் அனைத்து பேருந்துகளும், கலெக்டர் அலுவலக பஸ் நிறுத்தத்தில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பஸ் நடத்துனர் மற்றும் ஓட்டுனர்கள் பயணிகளை கலெக்டர் அலுவலக பஸ் நிறுத்தத்தில் இறக்க மறுப்பது தொடர்கதையாக உள்ளது.  எனவே, கலெக்டர் அலுவலக பஸ் நிறுத்தத்தில் அனைத்து அரசு பேருந்துகளும் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : passengers ,collector ,
× RELATED அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து; ஒருவர் பலி: 25க்கும் மேற்பட்டோர் காயம்!!