×

4 மாதத்தில் 6 பேர் தண்ணீரில் மூழ்கி சாவு குளிப்பவர்களை காவு வாங்கும் கொட்டகுடிஆறு தடுப்பணை தடுப்பு நடவடிக்கை எப்போது?

போடி, ஏப்.24:  போடி அருகே அணைப்பிள்ளையார் கோயில் கொட்டகுடி ஆறு தடுப்பணையில் கடந்த 4 மாதத்தில் 6 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். எனவே உயிர்ப்பலியை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர். போடி அருகே கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் கேரள மாநிலம் மூணாறு செல்லும் போடி மெட்டு சாலை இருக்கிறது. இச்சாலையில் மெயின் ரோட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அணைப்பிள்ளையார் கோயிலில் கொட்டகுடி ஆறு உள்ளது. இங்கு 50 அடி உயரம் கொண்ட தடுப்பணை இருக்கிறது. மழை காலங்களில் இந்த தடுப்பணையில் சீறி பாய்ந்து கொட்டும்  வெள்ளத்தால் யாரும் பக்கத்தில் போகவும் முடியாது ஆற்றில் குளிக்கவும் முடியாது. அதுபோன்ற நேரங்களில் எல்லாம் போலீசார் அணைபகுதியில் யாரையும் அனுமதிப்பதில்லை. தண்ணீர் குறைவாக இருக்கின்ற நேரங்களில் எல்லோரையும் குளிப்பதற்கு அனுமதிப்பார்கள். அதனால் மக்கள்  தடுப்பணை அருவியிலும் ஆற்றுக்குள்ளும் குளிப்பார்கள். துணிமணிகள் துவைப்பார்கள்.

இதுபோன்ற நேரங்களில் தண்ணீரில் மூழ்கி அடிக்கடி உயிர்ப்பலி ஏற்படுகிறது. இவ்வாறு இந்த ஆண்டு மட்டும் 6 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே உயிர்ப்பலியை தடுக்கும் விதமாக இங்கு மக்கள் குளிப்பதை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மக்கள் கூறுகையில், ‘‘போடிமெட்டு, குரங்கணி செல்பவர்கள் இந்த அணைப்பிள்ளையார் கொட்டகுடி தடுப்பணைக்குள் குளிக்காமல் செல்லமாட்டரர்கள். அந்தளவிற்கு சிறந்து விளங்கும் நீர்வீழ்ச்சியாக இருக்கிறது. கொட்டகுடி தடுப்பணைக்குள் நடப்பாண்டு ஒரு வருடத்திற்குள் இதுவரையில் ஆறு பேர் சிக்கி பலியாகி உள்ளனர். தற்போது குளிக்க செல்பவர்கள் ஆழம் தெரியாமல் காலை உள்ளே விடக் கூடாது  என்பதை மறந்து ஆழ பகுதிகளில் சென்று குளிப்பதால் சகதியில் அடிக்கடி மாட்டிக்கொள்கின்றனர். இதனால் உயிர் இழப்புகள் ஏற்பட்டு வருகிறது. இந்த தொடர் பலியினை தடுக்கும் விதமாக  மாவட்ட நிர்வாகம் தலையிட வேண்டும். அணை பகுதியில் குளிக்க அனுமதிக்க கூடாது. எச்சரிக்கை பலகை வைக்க  பொதுப்பணித் துறையினரும், போலீசாரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்தனர்.

Tags :
× RELATED களைகட்டிய தற்காலிக பூத்கள்