×

மானாமதுரை தயா நகரில் தெருநாய்கள் தொல்லை அதிகரிப்பு

மானாமதுரை, ஏப்.24: மானாமதுரை தயாநகரில் தெருநாய்கள் அதிகரித்து வருவதால் பெண்கள், குழந்தைகள் வெளியில் நடமாட அச்சமடைந்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியங்கள் 3 நகராட்சிகள், 12 பேரூராட்சிக்குட்பட்ட வீடுகள், தெருக்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாய்கள் இருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் வீடுகளில் 25 சதவீத நாய்கள் மட்டுமே வளர்க்கப்படுகின்றன. அவற்றை, நாய்களின் உரிமையாளர்கள் முறையாக, கால்நடைத்துறை டாக்டர்களிடம் காண்பித்து சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் தெருக்களில் திரியும் 75 சதவீத நாய்களை கட்டுப்படுத்துவது குறித்து எவ்வித நடவடிக்கையும் இல்லை. குறிப்பாக மானாமதுரை நகரில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. தினமும் வெறிநாய் கடியால் அரசு மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. முக்கிய தெருக்கள், அதிகளவு நெருக்கமுள்ள குடியிருப்புகளில் நாய்கள் குறுகிய சந்துகளில் படுத்து கிடக்கின்றன. இரவு நேரங்களில் அறியாமல் செல்வோரை இந்த நாய்கள் துரத்தி கடிக்கின்றன. இதனால் பெண்கள் குழந்தைகள் அச்சமடைந்துள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் யோகேஸ்வரன் கூறுகையில்,ஆண்டிற்கு ஒரு முறை நாய்களுக்கு வெறி பிடிக்காமல் இருக்க, ஊசி போடவேண்டும். நாய்களையும் கொல்லாமல் இருக்க, கருத்தடை செய்ய வேண்டும் என விலங்குகள் நல வாரியம் உத்தரவிட்டுள்ளது. தெருக்களில் திரியும் நாய்களுக்கு, கருத்தடை ஆபரேஷன் செய்ய, அரசு நாய் ஒன்றுக்கு, ரூ.445 வழங்குகிறது. இதில், நாய்களை பிடித்தல், கருத்தடை கருவி, மருந்துகள், நாய்களுக்கு உணவு, டாக்டர் செலவினத்திற்காக இவை பயன்படுத்தப்படுகிறது.

கடந்த இரண்டு வாரங்களாக தயா நகரில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. இரவு நேரங்களில் தெருவிளக்கு இல்லாத நேரங்களில் கும்பலாக வரும் நாய்கள் சிறு குழந்தைகளை கடிக்க வருகின்றன. முதியவர்களையும் விடுவதில்லை. தெருநாய்களுக்கு, கருத்தடை ஆபரேஷன் செய்யும் பணி நடக்கவில்லை. ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் இப்பகுதிகளில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பராமரிப்பின்றி தெருவில் விடப்பட்ட நாய்களுக்கு வெறி பிடித்து, தெருக்களில் செல்வோரை, விரட்டி கடிக்கின்றன. தினமும் பலர் நாய்கடிக்கு உள்ளாகின்றனர். நாய் கடிப்பதின் மூலம், ரேபிஸ் நோய் ஏற்படும் அச்சம் நிலவுகிறது. நகரில் உள்ள அனைத்து நாய்களுக்கும், முறையாக கருத்தடை ஆபரேஷன் செய்ய ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிடவேண்டும் என்றார்.

Tags : town ,Manamadurai Daya ,
× RELATED ஆரணி டவுன் தர்மராஜா கோயில் அக்னி...