×

சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டும் பழைய முறையிலேயே வரிவசூல்

ராமநாதபுரம், ஏப்.24: சிறப்பு நிலை நகராட்சிக்கான அந்தஸ்து வழங்கப்பட்டுள்ள நிலையில், நடப்பாண்டில் பழைய முறையிலேயே வரி வசூல் நடைபெறும் என ராமநாதபுரம் சிறப்பு நிலை நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். ராமநாதபுரம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளது. கடந்த ஆண்டு முதல் வீட்டு வரி, தொழில்வரி மற்றும் காலி இடங்களுக்கான வரிகள் 50% கூடுதலாக வசூலிக்கப்பட்டு வருகின்றன. சுமார் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டடங்களுக்கு வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு சுமார் ரூ.10 கோடி வரி வருவாய் வரவேண்டிய நிலையில் கடந்தாண்டு 50% அளவிலேயே வரி வசூலாகியுள்ளது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் ராமநாதபுரம் நகராட்சிக்கு சிறப்பு நிலை நகராட்சி அந்தஸ்து வழங்கப்பட்டது. தற்போதைய நகராட்சியுடன் அருகில் உள்ள சக்கரக்கோட்டை, பட்டணம்காத்தான் ஊராட்சிகளை இணைக்க நடவடிக்கை எடுக்க உள்ளனர். நகராட்சியை விட ஊராட்சிகளில் குறைவான வரி கட்டணம் செலுத்திவந்துள்ளனர். நகரின் எல்லை விரிவுபடுத்தப்படும் நிலையில் வரிவசூலில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், மக்களவைத் தேர்தல் நடைமுயைால் அதற்கான அரசின் உத்தரவு வராத நிலையில் ராமநாதபுரம் நகரில் கடந்த ஆண்டைப் போலவே நடப்பு ஆண்டிலும் வரிவசூல் நடத்தப்படும் என நகராட்சி வருவாய்த்துறையினர் தெரிவித்தனர். நகராட்சி நிர்வாகம் வரிவசூலில் தீவிரமாக இருக்கும் நிலையில், காலியிடங்களுக்கு வரி செலுத்த பொதுமக்கள் தயாராக இருந்தும் நகராட்சி அலுவலர்கள் காலதாமதம் செய்வதாக தெரிவிக்கின்றனர். வீடுகளுக்கு நேரில் சென்று வரி வசூல் செய்யும் போது ரசீது தருதல், புதிய வீடுகளுக்கு கட்ட அனுமதி அளித்தல், ஆகியவற்றில் நகராட்சி பொறியாளர்கள், வருவாய்த் துறையினர் தாமதம் செய்வதாக கூறுகின்றனர். பாதாள சாக்கடை இணைப்பு, காவிரி கூட்டு குடிநீர் இணைப்புகளுக்கும் பல நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை