×

தபால் ஓட்டு வழங்குவதில் அலட்சியம் தேர்தல் அலுவலர் முற்றுகை

பரமக்குடி, ஏப்.24: பரமக்குடி தொகுதியில் தபால் ஓட்டு விண்ணப்பம் வழங்குவதில் தேர்தல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதால் திமுகவினர் தேர்தல் அலுவலரை முற்றுகையிட்டனர். பரமக்குடி தொகுதியில் மக்களவை தேர்தலுடன் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் பணியில் போலீசார், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்களுக்கு கடைசி பயிற்சியின் போது தபால் ஓட்டு விண்ணப்பம் வழங்கப்பட்டது. அப்போது விண்ணப்பத்தை பெற்றவுடன் உடன் ஓட்டுப்பதிவு செய்ய வேண்டும் என தேர்தல் அலுவலர் கூறியதால் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் விண்ணப்பத்தை பெற்று கொள்ளாமல் வெளிநடப்பு செய்தனர்.

இந்த நிலையில் பரமக்குடி தாலுகா அலுவலகத்தில் தபால் ஓட்டு விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகிறது. இதை பெறுவதற்கு வரும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களை தேர்தல் அதிகாரிகள் விண்ணப்பம் வழங்காமல் ஏதாவது காரணம் காட்டி அலட்சியம் செய்து வருகின்றனர். இதனால் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து தேர்தல் அதிகாரிகளிடம் கேட்டால் முறையான பதில் சொல்ல மறுப்பதாக புலம்பி வருகின்றனர். மேலும், பரமக்குடி சட்டமன்ற தொகுதியிலிருந்து அரசு ஊழியர்களிடம் பெறும் தபால் ஓட்டுக்களை தேர்தல் அதிகாரிகள் வாங்கி அனுப்பாமல் காலம் கடத்தி வருகின்றனர். தொகுதியில் தபால் ஓட்டுகள் குறித்து விபரம் கேட்டால் எதுவும் தெரியாது என்று தேர்தல் அலுவலர் ராமன் கூறுவது சந்தேகத்தை ஏற்படுத்த கூடியதாக உள்ளது என கூறி திமுக., வேட்பாளர் சம்பத்குமார் தலைமையில் தேர்தல் அலுவலர் ராமனை தாலுகா அலுவலத்தில் முற்றுகையிட்டனர்.

அப்போது வேட்பாளர் சம்பத்குமார் கூறுகையில், பரமக்குடி தொகுதியில் உள்ள தபால் ஓட்டுகள் எவ்வளவு என்று தெரியவில்லை. எதை கேட்டாலும் மற்றவர்களிடம் கேட்கவேண்டும் என்கிறார். ஆட்சியர் முறையாக தகவல் கொடுக்கும் போது இவர் மாறி பேசுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மக்களவை தபால் ஓட்டுகள் முழுமையாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், சட்டமன்றத்திற்கான தபால் ஓட்டுகளில் காலதாமதமாவது சந்தேகத்தை எற்படுத்துகிறது என்றார்.

Tags : Postal Postal Siege ,Election Officer ,
× RELATED தேர்தல் மாதிரி வாக்கு பதிவு அவசியம் விதி மீறலுக்கு இடம் கொடுக்க கூடாது