சோழவந்தானை புறக்கணிக்கும் தனியார் பஸ்கள் அதிகாரிகள் ஒத்துழைப்புடன் வழித்தடம் மாறிச் செல்லும் அவலம்

சோழவந்தான், ஏப். 24: மதுரையிலிருந்து சோழவந்தான் வழியாகச் செல்ல வேண்டிய 20க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் போக்குவரத்து அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் விதிகளை மீறி வழித்தடம் மாறி செல்வதால் இப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மதுரை மாவட்டத்தின் நெற்களஞ்சியம் எனப் போற்றப்படும் ஊர் சோழவந்தான். இப்பகுதியில் நெல், வாழை, தென்னை, வெற்றிலை உள்ளிட்ட விவசாயப் பணிகள் நடைபெறுகிறது. இவ்வூருக்கு சுற்றுப்பகுதியிலுள்ள 50க்கும் மேற்ப்பட்ட கிராமங்களிலிருந்து சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாணவ, மாணவிகள், அரசு ஊழியர்கள் வந்து செல்கின்றனர். பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 50க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பஸ்கள் இவ்வூர் வழியாக இயக்கப்படுகிறது.

மதுரையிலிருந்து 20க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் சோழவந்தான் வழியாக செல்வதில்லை. மதுரை ஆரப்பாளையத்திலிருந்து சோழவந்தான் வழியாக திண்டுக்கல், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, செம்பட்டி, அய்யம்பாளையம், பெரியகுளம், தேனி, பழநி, உசிலம்பட்டி உள்ளிட்ட ஊர்களுக்கு 20க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில் பல பஸ்கள் துவரிமான், மேலக்கால் வழியாகவும், சில சமயநல்லூர், நகரி, ரிஷபம் வழியாகவும் சோழவந்தான் வழித்தடத்தில் மேற்குறிப்பிட்ட ஊர்களுக்கு சென்று வரவேண்டும். தற்போது சோழவந்தானில் ரயில்வே மேம்பால பணி நடைபெறுவதால் நகரி வழியாக வரும் பஸ்கள் வர இயலாது. ஆனால் துவரிமான் வழியாக வரும் பஸ்கள் தாராளமாக வந்து செல்லலாம். ஆனால் இவை லாப நோக்கத்திற்காக நேர் வழியில் சமயநல்லூர், வாடிப்பட்டி வழியாக விதிமுறைகளை மீறி செல்கின்றன.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தனியார் பஸ் உரிமையாளர்களின் “கவனிப்பால்” இந்த விதி மீறலை கண்டு கொள்வதில்லை. இதனால் பல ஊர்களுக்கு செல்லும் சோழவந்தான் பயணிகள் செல்ல வழியின்றி, பல மணி நேரம் காத்திருக்கும் அவலநிலை தொடர்கிறது. அனைத்து தனியார் பஸ்களையும் இவ்வழியே இயக்க வேண்டுமென்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாகும். சமூக ஆர்வலர் முத்துமாரியப்பன்(50) கூறுகையில், ‘“சோழவந்தான் வழியாக திண்டுக்கல், பெரியகுளம்,பழனி, வத்தலக்குண்டு, அலங்காநல்லூர், விருதுநகர், உசிலம்பட்டி உள்ளிட்ட பல ஊர்களுக்கு சென்ற தனியார் பஸ்கள் பல ஆண்டுகளாக வராமல் நேர்வழியில் செல்கின்றன.

இதனால் பல நேரங்களில் பல மணிநேரம் பஸ்கள் இல்லை. இவ்வழித்தடத்தில் இயங்கும் அனைத்து தனியார் பஸ்களையும் சோழவந்தான் வழியாக முறைப்படி இயக்கினால் பொதுமக்கள் சிரமமின்றி பல்வேறு ஊர்களுக்கு சென்று வர இயலும். போக்குவரத்து துறை அதிகாரிகள் இனிமேலாவது பொதுமக்கள் நலன்கருதி தனியார் பஸ்களை சோழவந்தான் வழியாக இயக்க வேண்டும். திண்டுக்கல், தேனி, மதுரை ஆகிய 3 மாவட்டங்கள் சம்மந்தப்பட்ட வழித்தடம் என்பதால் 3 மாவட்ட ஆட்சியர்களும் வழித்தடம் மாறும் பஸ்கள் மீது நடவடிக்கை எடுத்து உரிய வழித்தடத்தில் இயக்க உத்தரவிடவேண்டும்” என்றார்.

Related Stories: