மதுரையில் மடீட்சியாவின் ‘பில்ட் எக்ஸ்-2019’ கட்டுமான கண்காட்சி * ஏப்.26ல் துவங்கி 4 நாட்கள் ஏற்பாடு * அனுமதி இலவசம்

மதுரை, ஏப். 24: மதுரையில் மடீட்சியா (சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம்) மற்றும் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் இணைந்து ‘பில்ட் எக்ஸ்-2019’ கட்டுமான கண்காட்சியை நாளை மறுநாள் ஏப்.26ல் துவங்கி 4 நாட்கள் நடத்துகிறது. இதுகுறித்து மதுரையில் நேற்று கண்காட்சி தலைவர் ரவிச்சந்திரன், மடீட்சியா தலைவர் முருகன் மற்றும் பொறுப்பாளர்கள் அறிவழகன், பாஸ்கரன், முருகானந்தம் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:

‘‘மதுரை மாவட்ட கோர்ட் அருகே மடீட்சியா ஹாலில் ஏப்.26ல் துவங்கி 4 நாட்கள் கண்காட்சி நடக்கிறது. கட்டுமான துறையின் நவீன தொழில் நுட்பங்கள், புதிய கண்டுபிடிப்புகளுடன் எதிர்கால தொழில் வாய்ப்புகளையும் அறிந்து கொள்ள இக்கண்காட்சி ஒரு பாலமாக அமையும். நூற்றுக்கும் அதிக அரங்குகளில், பாரம்பரிய கட்டுமான முறைகள் துவங்கி, எளிதாக வீடு கட்டவும், வீட்டுக் கடன் பெறவும் ஆலோசனைகள் தரப்படுகிறது.

 

ஆத்தங்குடி டைல்ஸ் செய்முறை விளக்கம் முதல் பலதரப்பட்ட தகவல்களை, கட்டுமானப் பொருட்களை அறிந்து, வாங்கிடவும் மிகப்பெரும் வாய்ப்பாக இக்கண்காட்சி அமையும். மழைநீர் சேகரிப்பை அறியவும் சிறப்பு அரங்கு இருக்கிறது. கட்டிடக்கலை, பொறியியல் துறையினர் 2 ஆயிரம் பேர் அழைக்கப்பட்டுள்ளனர். மாணவர்களுக்கான கருத்தரங்கம், வேலைவாய்ப்பு வழிகாட்டல்கள் உண்டு. கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் கலந்து கொள்ள அனுமதி இலவசம். 4 நாட்களும் காலை 11 மணி துவங்கி மாலை 6 மணி வரை கண்காட்சி திறந்திருக்கும். பொறியாளர்கள், மாணவர்கள், வணிகர்கள், விற்பனையாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், பொதுமக்கள் என அத்தனை தரப்பினருக்கும் இக்கண்காட்சி பயனுள்ளதாக அமையும்’’ என்றனர்.

Related Stories: