வைகையில் கலக்கும் கழிவுநீரை தடுக்க வழியின்றி தடுமாறும் மாநகராட்சி  ஆறு சீரழிவு நிச்சயம்  உயிர் பலிகளும் தொடரும்

மதுரை, ஏப். 24: வைகை ஆற்றில் கலக்கும் கழிவுநீரை நிரந்தரமாக தடுக்க வழியின்றி மாநகராட்சி தடுமாறி வருகிறது. இதனால் வைகை சீரழிவதுடன், நோய்கள் பெருகி உயிர்ப்பலிகளும் தொடரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் பந்தல்குடி உள்பட 11 கால்வாய்கள் கடந்து செல்கின்றன. இவைகளின் இருபுறமும் கான்க்ரீட் சுவர் கட்டப்பட்டுள்ளது. இவற்றில் மழை நீர் ஓடுவதற்கு பதிலாக சாக்கடைதான் ஓடுகிறது. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை இந்த கால்வாய்களில் கலக்கச் செய்கின்றனர். இந்நிலையில் வீட்டில் உருவாகும் கழிவுநீரை சிலர் ரோடுகளில் செல்வதுபோல் அமைத்துள்ளனர். இது தவிர மழைநீர் செல்வதற்காக கட்டப்பட்ட கால்வாய்களில் சாக்கடை ஓடுகிறது.

இதையெல்லாம் மாநகராட்சியால் தடுக்க முடியவில்லை. சாலைகளில் கழிவுநீர் கலந்தவர்களுக்கு அபராதம் விதிக்கும் மாநகராட்சி, வைகை ஆற்றில் கழிவுநீர் கலக்கச்செய்வதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. வைகைக்கரை சாலையோர வீட்டு பகுதிகளில் பாதாளசாக்கடை வசதிகள் செய்யப்படவில்லை. இதனால் வீடுகளில் உருவாகும் சாக்கடை, குழாய்கள் மூலம் நேரடியாக வைகை ஆற்றில் கலக்கச் செய்யப்படுகிறது. மதுரை மாநகரில் இடைப்பட்ட பகுதியில் 11 கி.மீ., தூரத்திற்கு வைகை ஆறு குறுக்கிட்டுச் செல்கிறது. ஆற்றின் இடைப்பட்ட பகுதியில் 67 இடங்களில் ராட்சத குழாய்கள் அமைத்து பாதாளசாக்கடையை கலக்கச் செய்வது ஆய்வு அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது. வைகை ஆற்றை சீரழிக்கும் செயலை மாநகராட்சியே முன்நின்று செய்து வருவதுதான் வேதனையான விஷயம்.

வைகை ஆற்றுக்குள் பள்ளங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இந்த பள்ளங்களில் கழிவுநீர் தேங்கி நிற்கும். மழை ெபய்யும்போது, கழிவுநீர் பள்ளங்களுக்கு அடியில் சென்று விடும். மேல் பகுதியில் மழைநீர் இருக்கும். இது தெரியாமல் சிறுவர்கள் குளித்து நீரில் மூழ்கி விஷத்தன்மை ஏறி உயிரிழந்த சம்பவங்களும் அரங்ேகறியுள்ளன. சிறுவர்களை காவு வாங்குவதற்கு காரணம், வைகையில் கழிவுநீர் கலப்பதே. இதைப்பற்றியெல்லாம் கொஞ்சம் கூட மாநகராட்சியால் சிந்திக்க முடியவில்லை. வைகையும் சீரழிகிறது. எதிர்வரும் காலங்களில் உயிரிழப்புகளும் நேரிடலாம் என இயற்கை ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மதுரை மாநகராட்சி கமிஷனர் விசாகன் கூறும்போது, ‘‘மதுரை பந்தல்குடி கால்வாய் பகுதியில் கழிவுநீரேற்று நிலையம் அமைக்கப்படும். வைகையில் கலக்கும் கழிவுநீரை ஒட்டுமொத்தமாக திசை திருப்பி கழிவுநீரேற்று நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும். இங்கு சுத்தீகரிப்பு செய்து தண்ணீராக மாற்றி பூங்கா உள்ளிட்டவைகளில் செடி, மரங்கள் வளர்க்க பயன்படுத்தும் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். 

Related Stories: