வாக்கு இயந்திரம் அறைக்கு சீல் சாவி கருவூலகத்தில் ஒப்படைப்பு

மதுரை, ஏப். 24: ‘‘வாக்கு எண்ணிக்கை மையத்தின் அறை பூட்டி சீல் வைக்கப்பட்டு, சாவிகள் கருவூலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது’’ என்று கலெக்டர் நடராஜன் கூறினார். மதுரை மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு கடந்த 18ம் தேதி நடந்தது. தற்போது இத்தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் மதுரை மருத்துவ கல்லூரியில் 6 அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை மையத்தை கலெக்டர் நடராஜன், மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம், துணை ஆணையர் சசிமோகன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.  பின்பு கலெக்டர் நடராஜன் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘வாக்கு எண்ணிக்கை மையத்தில், வாக்கு இயந்திரம் உள்ள அறையும், தேர்தல் தொடர்பான ஆவணங்கள் உள்ள அறைகளையும் முறையாக பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன. அதற்கான சாவிகள் கருவூலகத்தில் ஓப்படைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மையத்தில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டு மூன்றடுக்கு பாதுகாப்பின் கீழ் மத்தியப்படை, மாநிலப்படை மற்றும் உள்ளூர் காவல் படையினர் கண்காணிக்கின்றனர்.  

மருத்துவ கல்லூரி வளாகம் முழுவதும் ஏராளமான போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மருத்துவ கல்லூரிக்கு வரும் டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் அடையாள அட்டை காண்பிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். இவர்களை தவிர்த்து வேறு யாரும் உள்ளே வந்தால், முறையாக விசாரித்து, பெயர், முகவரி மற்றும் வருகைக்கான நோக்கம், உள்ளே சென்ற நேரம், வெளியே வரும் நேரம் உள்ள தகவல் முறையாக பதிவேட்டில் பதியப்பட்டு வருகிறது. கலெக்டர் அலுவலகத்தில் தபால் ஓட்டுக்கள் முறையாக பெறப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. தபால் ஓட்டுகள் உள்ள அறைக்கு ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதி கண்காணிப்பு கேமிரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. தேர்தல் தொடர்பான அனைத்து பாதுகாப்பு பணிகளும் நடந்து வருகிறது’’ என்றார்.

Related Stories: