மேலூரில் சுழன்றடித்த சூறாவளி 2 ஆயிரம் ஏக்கர் வாழை, கரும்புகள் நாசம் அதிர்ச்சியில் விவசாயிகள்

மேலூர், ஏப். 24: மேலூர் அதனைச் சுற்றி உள்ள கிராமங்களில் நேற்று முன்தினம் சுழன்றடித்த சூறாவளி காற்றில் வாழை, கரும்பு, கோடை பயிர்கள் என 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் சேதமடைந்ததால் விவசாயிகள் அதிர்ச்சியில் உள்ளனர். மேலூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை சூறாவளி காற்றுடன் 2 மணி நேரம் மழை பெய்தது. இதனால் நகர் மற்றும் கிராமப் பகுதிகளில் 5 மணி நேரத்திற்கு மேல் மின்சாரம் தடைபட்டது. நேற்று வரை சில கிராமங்களில் மின்சாரம் வராத நிலையும் உள்ளது. இந்நிலையில் சுழன்றடித்த சூறாவளி காற்றால் வெள்ளலூர், உறங்கான்பட்டி, மட்டங்கிபட்டி, முருகன்பட்டி, பழையூர்பட்டி, குறிச்சிபட்டி, கண்மாய்பட்டி, கட்டகாளைப்பட்டி, கட்டசோலைபட்டி, எட்டிமங்கலம், சென்னகரம்பட்டி பகுதிகளில் உள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை, கரும்பு மற்றும் கோடை விவசாயங்கள் முற்றிலும் சேதமடைந்தன.

இதனால் விவசாயிகள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். இச் சேதங்கள் கஜா புயலின்போது ஏற்பட்ட சேதத்தை போன்று உள்ளதாக விவசாயிகள் கூறினர். வெள்ளலூரைச் சேர்ந்த விவசாயி குறிஞ்சிகுமரன் கூறுகையில், ‘சுழன்றடித்த இந்த சூறைக் காற்றால் அறுவடைக்கு தயாராக இருந்த வாழைகள் முற்றிலும் ஒடிந்து விழுந்து விட்டது. எனது 13 ஏக்கர் வாழையும் இப்படி சேதமானதால் ஏகப்பட்ட நஷ்டமாகி உள்ளது. இதேபோல் கரும்புகள் அனைத்தும் தரையோடு தரையாக சாய்ந்து விட்டது. இதை இனி ஒன்றும் செய்ய முடியாது. சில நாட்களுக்குள் இவற்றை வெட்டி ஆலைக்கு அனுப்பினால் ஓரளவு பணம் கிடைக்கும். ஒரே நேரத்தில் மொத்த கரும்புகளும் இதுபோல் சாய்ந்துள்ளதால் அதை கொள்முதல் செய்வதற்கும் அதிகாரிகள் தயராக இருப்பார்களா என தெரியவில்லை.

சுழன்றடித்த இந்த காற்றில் வீட்டின் பின்புறம் வைத்துள்ள ஒரு சில வாழைகள் கூட தப்பிக்கவில்லை. கஜா புயலின்போது ஏற்பட்ட சேதத்தை விட அதிகமாக தற்போது இப்பகுதியில் சேதம் ஏற்பட்டுள்ளது. கடுமையான வெயிலில் ஈரப்பதம் இல்லாமல் தரையில் போதுமான பிடிப்பு இல்லாமல் இருந்த வாழைகள் இந்த காற்றுக்கும் தாங்க முடியாமல் சாய்ந்துவிட்டது’ என்றார். கரும்பு, வாழை சேதமான அதிர்ச்சியில் உள்ள விவசாயிகள் வாங்கிய கடனை எப்படி அடைப்பது என்ற கவலையில் ஆழ்ந்துள்ளனர். அரசு சரியான வகையில் சேதத்தை கணக்கெடுத்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: