×

கொலையுண்ட கணவரின் கண்கள் அரசு மருத்துவமனைக்கு தானம் மனைவியின் மனித நேயத்திற்கு பாராட்டு

மதுரை, ஏப். 24: கொலையுண்ட கணவரின் கண்களை அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கிய அவரது மனைவியை பலரும் பாராட்டினர்.
மதுரை திருநகர் பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் பாஸ்கரன்(55). இவர் அண்ணாநகர் பகுதியில் உள்ள தனியார் ஸ்கேன் சென்டரில் ரேடியாலிஜிஸ்ட்டாக பணிபுரிந்து வந்தார். நேற்று அதிகாலை திருப்பரங்குன்றம் ரோட்டில் உடல்முழுவதும் பலத்த காயங்களுடன் கிடந்த இவர், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். முதலில் வாகன விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற அடிப்படையில், திடீர்நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாஸ்கரனின் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டிருப்பதற்கான சந்தேகம் ஏற்பட்டது.

இச்சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் பாஸ்கரனின் உடல், மதுரை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது பாஸ்கரனின் கண்களை தானம் செய்ய, அவரது மனைவி தேவி சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து பாஸ்கரனின் இரு கண்களும் அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது. கணவன் கொலை செய்யப்பட்ட துக்கத்திலும், அவரது கண்களை தானமாக வழங்கிய அவரது மனைவியின் மனித நேயத்தை, டாக்டர்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டினர். பாஸ்கரன்-தேவி தம்பதியினருக்கு முகேஷ்கண்ணா (17) மற்றும் சூரியபிரகாஷ் (10)என்ற இரு மகன்கள் உள்ளனர்.

Tags : government hospital ,donor ,
× RELATED மதுரை அரசு மருத்துவமனையில் இருந்து...