×

குடிநீர் கோரி நத்தம் யூனியன் அலுவலகம் முற்றுகை

நத்தம், ஏப். 24: குடிநீர் கோரி நத்தம் யூனியன் அலுவலகத்தை காலிக்குடங்களுடன் கிராமமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நத்தம்  ஒன்றியம், வேலம்பட்டி ஊராட்சிக்குட்பட்டது சேர்வீடு, துவராபதி, ராக்காச்சி  அம்மன் கோயில் தெரு, அண்ணாநகர், அசோக் நகர், காமராஜ் நகர். இங்கு 10  ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் 15 மேல்நிலை  குடிநீர் தொட்டிகள் உள்ளன. ஆழ்துளை கிணறுகள் மூலம் நீரேற்றி 2 நாட்களுக்கு  ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

தற்போது வறட்சியின்  காரணமாக நிலத்தடி நீராதாரம் அதலபாதாளத்திற்கு சென்று விட்டது. இதனால்  பற்றாக்குறை ஏற்பட்டு இப்பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக குடிநீர்  விநியோகம் இல்லை. தேவையை சமாளிக்க குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி  வந்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தனர்.  ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த இப்பகுதி  மக்கள் நேற்று காலை நத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு காலிக்குடங்களுடன்  திரண்டு வந்து திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தாசில்தார்  ஜான்பாஸ்டின் டல்லஸ், வட்டார வளர்ச்சி அலுவலர் அந்தோணியார், போலீஸ்  சப்இன்ஸ்பெக்டர் திவான் மைதீன், வசந்தி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை  நடத்தினர். விரைவில் முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக  உறுதியளித்தனர். அதன்பின்பே மக்கள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.  இந்த முற்றுகை போராட்டதால் நத்தம் யூனியன் அலுவலகத்தில் சுமார் 3 மணிநேரம்  பரபரப்பு நிலவியது.

Tags : Union Office Siege ,
× RELATED திண்டுக்கல் மாவட்டம் கணவாய்ப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை