சிறுமலையில் பற்றிய காட்டுத்தீயை வான் மழை வந்து அணைத்தது வன உயிரினங்கள், மரங்கள் தப்பின

திண்டுக்கல், ஏப். 24: சிறுமலையில் பற்றிய காட்டுத்தீயை மழை பெய்து அணைத்தது. இதனால் வன உயிரினங்கள், மரங்கள், செடிகள் தப்பின.

திண்டுக்கல் அடுத்த சிறுமலை கடல்மட்டத்தில் இருந்து 1600 மீட்டர் உயரமுடையது. 18 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட இம்மலைப்பகுதியில் மா, பலா, வாழை என முக்கனிகளும் விளைகிறது. தவிர காட்டெருமைகள், காட்டுப்பன்றி, சிறுத்தை, புலி, மான் உள்பட விலங்கினங்களும், பலவிதமான பறவைகளும் வாழ்கின்றன. மேலும் விலை மதிப்புள்ள மரங்கள், அரிய வகை மூலிகை செடிகள் அதிகளவில் உள்ளன.

இங்கு வனப்பகுதிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் மீறி உள்ளே நுழையும் சிலர் சிகரெட் பிடித்து தீயை அணைக்காமல் விட்டு விடுகின்றனர். மேலும் சிலர் தீ மூட்டி மகிழ்கின்றனர். இந்த தீ காற்றின் வேகத்தில் பரவி வனப்பகுதியை பதம் பார்த்து விடுகிறது. சிறுமலை பகுதியில் கடந்த சில நாட்களாக பட்டா நிலத்தில் உள்ளவர்கள் தங்களது தோட்டங்களில் காய்ந்த புல், பூண்டுகளை தீ வைக்கின்றனர். இது வனப்பகுதிக்குள் பரவி கொழுந்து விட்டு எரிகிறது. இதில் ஏராளமான மரங்கள், செடிகள் எரிந்து நாசமாகி வருகின்றன.

இதுபோல் நேற்று முன்தினம் பகல் 4 மணியளவில் பட்டா நிலத்தில் வைத்த தீ வனப்பகுதிக்குள் பிடித்து மள, மளவென அரிந்தது. இது மாலை 6 மணிக்கு அதிபயங்கர காட்டுத்தீயாக மாறியது. இதை கண்டு வனத்துறையினர் செய்வதறியாது திகைத்தனர். அந்த நேரத்தில் திடீரென மழை பெய்து தீயை அணைத்தது. இதனால் வன உயிரினங்கள், மரங்கள், செடிகள் தப்பின.

உபகரணங்கள் இல்லை

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது: நிலத்தின் தீ வைத்தால் அங்குள்ள நுண்ணுயிர்கள், வைட்டமின்கள் இறந்து விடும் என உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தி வருகிறோம். இதை பலர் கேட்பதில்லை. புல், பூண்டுகளை உரமாக பயன்படுத்த விழிப்புணர்வு செய்ய வேண்டியுள்ளது. மேலும் வனத்தில் தீ பிடித்தால் உடனடியாக சென்று அணைப்பதற்கு உரிய நவீன கருவிகள், நீர் தெளிப்பான், ஹெலிகாப்டர் போன்ற உபகரணங்கள் இல்லை. மர கிளைகளை பறித்துதான் அணைக்க வேண்டியுள்ளது.

இந்த நேரத்தில் காற்று பலமாக வீசினால் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. நல்லவேளையாக அன்று வான் மழை பொழிந்து தீயை அணைத்தது. தீ வைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் உள்ளோம். வனப்பகுதிகள் செல்பவர்களும் காடுகளை நமது நண்பர்களை போல பாவித்து தீ வைக்காமல் உதவ வேண்டும். கோடை காலம் முடியும் வரை வனப்பகுதிக்குள் செல்பவர்களுக்கு பலத்த சோதனைக்கு பின்பே அனுமதிக்கப்படுவார்கள்’ என்றனர்.

Related Stories: