முகூர்த்தங்கள் இல்லாததால் சித்திரையில் சீராக செல்லும் வாழைக்காய் ஏற்றமும் இல்லை; இறக்கமும் இல்லை

வத்தலக்குண்டு, ஏப். 24: வத்தலக்குண்டு சந்தையில் வாழைக்காய் விலை ஏற்ற, இறக்கமின்றி நடுத்தரமாய் உள்ளது. வத்தலக்குண்டு வாழைக்காய் சந்தை மாவட்டத்தில் சிறுமலை செட்டுக்கு அடுத்தபடியான பெரிய சந்தையாகும். இங்கு பழைய வத்தலக்குண்டு, விராலிப்பட்டி, தும்மலப்பட்டி, வெங்கிடாஸ்திரி கோட்டை, கருத்தப்பட்டி, குன்னுவாரன்கோட்டை பகுதிகளில் இருந்து வாழைக்காய்கள் வரத்து உள்ளன. நேற்று முன்தினம் சந்தைக்கு வாழைக்காய் வரத்து அதிகம் இருந்தது. ஆனால் வாழைக்காய் விலை கடந்த வாரம் போலே மிக கூடுதலாகவும் இல்லாமல், மிக குறைவாகவும் இல்லாமல் நடுத்தரமாக இருந்தது.நடப்பு சித்திரை மாதத்தில் திருமண முகூர்த்தங்கள் எதுவும் இருக்காது.

இதனால் இம்மாதம் முழுவதும் வாழைக்காய் விலை நடுத்தரமாக இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர். சந்தையில் வாழைக்காய் விலை நிலவரம்: ரஸ்தாலி தார் ரூ.350 முதல் 400 வரையும், நாட்டு தார் ரூ.250 முதல் ரூ.300 வரையும், செவ்வாழை தார் ரூ.450 முதல் 500 வரையும், பூவன் தார் ரூ.300 முதல் 350 வரையும் ஏலம் போனது. இதுகுறித்து விவசாயி மரியலூயிஸ் கூறுகையில், ‘இன்னும் 2 வாரத்திற்கு வாழைக்காய் விலை இதேபோல் நடுத்தரமாகத்தான் இருக்கும். வைகாசி பிறக்கும் முன் முதல் வாரத்தில் விலை ஏற்றமாகும்’ என்றார்.

Related Stories: