×

ஆத்தூர் ஊராட்சியில் தலைகீழாக நடக்கும் தனிநபர் கழிப்பறை திட்டம் பொதுமக்கள் புலம்பல்

செம்பட்டி, ஏப். 24: ஆத்தூர் ஊராட்சியில் தனிநபர் கழிப்பறை திட்டம் கூட்டு கழிப்பறைகளாக கட்டப்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஆத்தூர்  ஊராட்சியில் தூய்மை இந்தியா திட்டம் மூலம் தனிநபர் கழிப்பறை கட்டி  கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் இங்கு தனிநபருக்கு கட்ட வேண்டிய கழிப்பறை  கூட்டு கழிப்பறைகளாக கட்டப்பட்டு வருகின்றன. இதனால் கிராமமக்கள் பயன்படுத்த முடியாமல்  திறந்தவெளியையே கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். குறிப்பாக ஆலம்பட்டி  சாலையில் தனிநபர் கழிப்பறை திட்டம் மூலம் கட்ட வேண்டிய கழிப்பறைகளை கூட்டாக  10 பயனாளிகளின் பெயர்களை எழுதி 10 கழிப்பறைகளை அடுத்தடுத்து  கட்டியுள்ளனர்.

முறையான தண்ணீர், மின்விளக்கு வசதி இல்லாததால் இதனை  பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் இப்பகுதியினர் ஆலம்பட்டி,  மாலப்பட்டி சாலையை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். அப்பகுதி  மக்கள் கூறுகையில், ‘தனிநபர் கழிப்பறை திட்டம் என்ற பெயரில் அடுத்தடுத்து  கழிப்பறைகளை கட்டியுள்ளனர். அதிலும் தண்ணீர் வசதியே இல்லை. இங்குள்ள  சுகாதார வளாகமும் சீர்படுத்தாமல் புதர்மண்டி கிடக்கிறது. இதனால் திறந்தவெளி  கழிப்பிடத்தைத்தான் பயன்படுத்தி வருகிறோம். இதன்மூலம் தொற்றுநோய் வேகமாக  பரவி வருகிறது. மக்கள் மீது அக்கறை இல்லாமல் செயல்படும் ஊராட்சி நிர்வாகம்  மீது மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுப்பதுடன் தலைகீழாக நடக்கும் தனிநபர் கழிப்பறை திட்டத்தை முறையாக  செயல்படுத்தவும் அறிவுறுத்த வேண்டும்’  என்றனர்.

Tags : Aduthur Panchayat ,
× RELATED தேசிய ரோல்பால் போட்டிக்கு தமிழக வீரர்களை வாழ்த்தி அனுப்பும் நிகழ்ச்சி