ஒருநாள் மழைக்கே சகதிக்காடான பழநி கேள்விக்குறியாகும் சுகாதாரம்

பழநி, ஏப். 24: பழநி நகரம் ஒருநாள் பெய்த மழைக்கே சகதிக்காடாக மாறியதால் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. பழநி  நகரில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வந்தது. பொதுமக்கள் வெளியில்  நடமாட முடியாமல் அனல்காற்று வீசியது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக பழநி  நகரில் மழை பெய்து வருகிறது. இதனால் அனல்காற்று நீங்கி குளிர்காற்று  வீசிவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு பெய்த  மழையின் அளவு 10.5 மில்லிமீட்டராக பதிவாகி உள்ளது. கனமழையால் சாலைகளில்  மழைநீர் வெள்ளம்போல் ஓடியது. நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல்  தேங்கியது. கால்வாய்கள் தூர்வாரப்படாததால் கழிவுநீர் சாலைகளில்  வழிந்தோடியது.

ஒருநாள் பெய்த மழைக்கே பழநி நகரின் பெரும்பாலான  தெருக்கள் சகதிக்காடாக மாறி உள்ளன. குப்பைகள் சரிவர அள்ளப்படாததால்  மழைநீரில் நனைந்து கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் பழநி நகரின்  சுகாதாரம் கேள்விக்குறியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திராநகரை சேர்ந்த மணி கூறியதாவது, ‘பழநியில்  குப்பைகள் மாதத்திற்கு ஒருமுறை கூட சரியாக அள்ளப்படுவதில்லை. இதனால்  நகரின் பல இடங்களில் குப்பைகள் மலைபோல் தேங்கி கிடக்கின்றன. பாதி சாலை  அமைத்துவிட்டு, மீதி சாலை அப்படியே விடப்பட்டு விட்டது. திடீர் மழையால்  தற்போது அப்பகுதி சகதிக்காடாக மாறி உள்ளது. பள்ளிக்கு செல்லும் குழந்தைகள்,  முதியவர்கள் போன்றோர் அதில்தான் நடந்து செல்ல வேண்டி உள்ளது. இதனால்  தொற்றுநோய் ஏற்படும் சூழல் உண்டாகி உள்ளது. கால்வாய்கள் தூர்வாரததால்  மழைநீருடன் கலந்து கழிவுகள் சாலைகளில் கிடக்கின்றன. நகராட்சி நிர்வாகம்  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Related Stories: