×

வெப்ப தாக்கத்தை தவிர்க்க செய்ய வேண்டியவை பேரிடர் மேலாண்துறை நோட்டீஸ் விநியோகம்

பழநி,  ஏப். 24: வெப்ப தாக்கத்தை தவிர்க்க செய்ய வேண்டியவை குறித்து  வருவாய்த்துறை, பேரிடர் மேலாண்துறை சார்பில் விழிப்புணர்வு நோட்டீஸ்  விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தாண்டு கோடைகாலம்  துவங்கும் முன்பே வெயில் கொளுத்த துவங்கி விட்டது. தற்போது பகல் நேரங்களில்  மக்கள் வெளியில் நடமாட முடியாத அளவிற்கு வெயிலின் கொடுமை உள்ளது.   வழக்கமான வெப்பநிலையைவிட இந்த ஆண்டு கோடைகாலத்தில் வெப்பம் 5 டிகிரி  அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, வெயில்  காலத்தில் மேற்கொள்ள வேண்டியவை குறித்து வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர்  மேலாண்மைதுறை சார்பில் பொதுமக்களிடம் பிட்நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டு  வருகிறது.
அதில், ‘தாகம் இல்லாவிட்டாலும் அடிக்கடி நீர் குடிக்க  வேண்டும்.

லேசான ஆடைகள், வெளிறிய நிறமுள்ள ஆடைகளை அணிய வேண்டும். வீட்டின்  ஜன்னல்களில் உள்ள திரையை பகல் நேரங்களில் மூடியும், இரவு நேரங்களில்  திறந்து வைத்தும் குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டும். குளிர்ந்த நீரில்  அடிக்கடி குளித்து  உடல்சூட்டை குறைத்து கொள்ளலாம். வெளியில் செல்லும்போது  குடை அல்லது குல்லா அணிந்து செல்ல வேண்டும். இளநீர், தர்பூசணி, நுங்கு,  மோர் உள்ளிட்டவற்றை அதிகளவு அருந்த வேண்டும். கால்நடைகள், வளர்ப்பு  பிராணிகளை நிழலில் கட்டி வைக்க வேண்டும். பகல் 12 மணிமுதல் பிற்பகல் 3 மணி  வரை வெளியில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும். மது, தேனீர், காபி குடிப்பதை  தவிர்க்க வேண்டும். சர்க்கரை, இருதய நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள்  வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். குழந்தைகளையும், வளர்ப்பு  பிராணிகளையும் பூட்டப்பட்ட வாகனங்களில் தனியாக அமர வைக்க வேண்டாம்’ என  தெரிவிக்கப்பட்டிருந்தது.

Tags :
× RELATED வெயிலின் தாக்கத்தால் குளத்தில் செத்து மிதந்த மீன்கள்