75 சதவீத பணிகள் நிறைவடைந்தது உள்விளையாட்டரங்கம் விரைவில் திறப்பு

புதுச்சேரி, ஏப். 24:  புதுச்சேரி உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானம் மற்றும் ராஜீவ்காந்தி உள்விளையாட்டு அரங்கத்தில் மாணவர்கள் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். விளையாட்டை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில், மத்திய அரசின் நிதியில் ரூ.6 கோடி செலவில் லாஸ்பேட்டையில் உள் விளையாட்டரங்கம் கட்டும் பணி கடந்த 2014ம் ஆண்டு துவங்கியது. நீதிபதிகள் குடியிருப்பு அருகே 40 மீட்டர் அகலம், 80 மீட்டர் நீளத்தில் உள் விளையாட்டரங்கம் கட்டுமான பணிகள் நடந்து  வருகிறது. இதற்கான நிதியை மத்திய அரசு படிப்படியாக வழங்கி வந்தது. மத்திய அரசு ரூ.4.40 கோடி நிதி வழங்கி இருந்த நிலையில் நிலுவைத் தொகையான ரூ.1.60 கோடியை வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் விளையாட்டு அரங்கம் கட்டும் பணியை தனியார் கட்டுமான நிறுவனம் நிறுத்தியது.

தற்போது மீதமுள்ள தொகையையும் மத்திய அரசு வழங்கிவிட்டது. தற்போது இருபுறத்திலும் கேலரி அமைக்கப்பட்டு பிரமாண்டமாக உள்விளையாட்டரங்கமாக உருவாக்கப்பட்டுள்ளது தொடர்ந்து, கட்டிடத்துக்கு பெயிண்ட் அடிக்கும் பணி துவங்கியுள்ளது.

தற்போது அரங்கத்தின் உள் வேலைகள் முடிவடைந்து, 75 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது. வெளிப்புறத்தில் சாலை, சுற்றுச்சுவர் மற்றும் வாகனம் நிறுத்துமிடம் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. இன்னும் ஒரு மாதத்தில் அனைத்து பணிகளும் முடிக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது பல்நோக்கு விளையாட்டரங்கமாக அமைவதால் கூடைப்பந்து, டேபிள் டென்னிஸ், வாலிபால், பேட்மின்டன் உள்ளிட்ட பயிற்சிகளை வீரர்கள் மேற்கொள்ள முடியும். எனவே, வீரர்களின் நலன் கருதி மீதமுள்ள பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டுமென  கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: