×

தக்கைப்பூண்டை விதைத்தால் மண்ணின் வளம் பெருகும் விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

அரியலூர்,ஏப்.24: தக்கைப்பூண்டை விதைத்தால் மண்ணின் வளம் பெருகும் என  என விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இது குறித்து அரியலூர் கலெக்டர்  விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:அரியலூர் மாவட்டத்தில் சராசரியாக 1,05,000 எக்டரில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இவற்றில் வேளாண்மை பயிர்கள் 75,000 எக்டரிலும், தோட்டக்கலை பயிர்கள் 30,000 எக்டரிலும் சாகுபடி செய்யப்படுகிறது. ஒட்டு மொத்த சாகுபடி பரப்பில் 40,000 எக்டரில் நஞ்சை மற்றும் இறவை பயிராக சாகுபடி செய்யப்படுகிறது.மண்ணின் வளம் மற்றும் சத்துகளின் நிலையை அறிய மண் மாதிரி எடுக்கப்பட்டு, மண் தன்மைக்கு ஏற்ப மண்வள அட்டைகள் மூலம் உரம் பரிந்துரை செய்யப்படுகிறது. அரியலூர் மாவட்டத்தில் அங்கக சத்து மண்ணில் சராசரி அளவான 0.5மூக்கும் குறைவாக உள்ளது. அங்கக சத்து மண்ணில் போதுமான அளவில் இருந்தால் மட்டுமே பேரூட்ட சத்துக்கள், இரண்டாம் நிலை சத்துக்கள் மற்றும் நுண்ணூட்டங்கள் மண்ணில் இருந்து பயிர்கள் எடுத்துக் கொள்ள முடியும். மேலும் மண் மனித உடல் போன்று நோய் மற்றும் சத்து குறைபாடுகள் தாங்கி பயிர் வளர்ச்சிக்கு துணை புரியும். மேலும் மண்ணில் காற்றோட்டம் மற்றும் பொலபொலப்புத் தன்மை உண்டாகிறது. தற்போது தொழு உரம் மற்றும் மண்புழு உரம் குறைந்த அளவே இடப்படுவதால் அங்கக சத்தின் அளவு மண்ணில் குறைந்து கொண்டே வருகிறது.

அங்கக சத்தை நிலை நிறுத்த தக்கைப்பூண்டு, சணப்பை, சீமை அகத்தி, கொளஞ்சி மற்றும் பில்லிப்பயிறு போன்ற பயிர்களை பயிரிட்டு 45 நாட்களில் மடக்கி உழுது பசுந்தாள் உரமாக பயன்படுத்தலாம். பசுந்தாள் உர பயிர்களில் தக்கைப்பூண்டு மட்டுமே அதிகளவில் ஏக்கருக்கு 10 டன் அளவில் பசுந்தழைகளை தருகிறது. மண்ணில் அங்கக சத்தை நிலை நிறுத்தும் வகையில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் தக்கைப்பூண்டு கிலோவிற்கு ரூ.30-க்கு மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.தற்போது கோடை மற்றும் குறுவை நெல் சாகுபடி செய்ய உள்ள விவசாயிகள், இறவை பாசனம் மூலம் இதர பயிர்கள் சாகுபடி செய்ய உள்ள விவசாயிகள் தக்கைப்பூண்டை விதைத்து 45 நாட்களில் மண்ணில் மடக்கி உழுது பயிர் சாகுபடி செய்யலாம். தக்கைப்பூண்டை விதைப்பதற்கு முன்னர் வயலை நன்றாக உழவு செய்து, கடைசி உழவின் போது ஏக்கருக்கு 20 கிலோ விதைத்து சீராக நீர் பாய்ச்ச வேண்டும். 10 நாட்கள் இடைவெளியில் 4 முறை நீர் பாய்ச்ச வேண்டும். இத்தருணத்தில் தக்கைப்பூண்டு 5 முதல் 6 அடி உயரம் வரை வளர்ந்திருக்கும். 45 முதல் 50 நாட்களில் தக்கைப்பூண்டு பூக்கும் தருணத்தில் நன்றாக மடக்கி உழவு செய்ய வேண்டும். இதனால், களைகள் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டும், வேர்முடிச்சுகளில் உள்ள நூற்புழு கட்டுப்படுத்தப்பட்டும், களர் மண் சமன் செய்யப்படும் நிலையும் உருவாகிறது.
 
ஏக்கர் ஒன்றுக்கு 10 டன் எடை கொண்ட பசுந்தாள் உரம் வயலுக்கு கிடைக்கும்.  இதன் மூலம் 350 கிலோ தழைச்சத்தும், 60 கிலோ மணிச்சத்தும், 120 கிலோ சாம்பல் சத்தும் மண்ணில் நிலை நிறுத்தப்படும். இதனால் மண்ணின் தரம் மற்றும் அமைப்பு மேம்படுத்தப்படும், நீர் பிடிப்பு கொள்ளளவை அதிகப்படுத்தும் மற்றும் மண் அரிப்பினால் ஏற்படும் இழப்பு குறைக்கப்படும். தக்கைப்புபூண்டு சாகுபடி செய்யப்பட்ட நிலத்தில் அடுத்த சாகுபடி செய்வதற்காக போடப்படும் எந்த பயிர்க்கும் ரசாயன உரம் குறைந்த அளவே இட்டால் போதும். மேலும் பூச்சி நோய் தாக்குதலும் குறைவாக இருக்கும். தற்போது அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வேளாண்மை விற்பனை மையங்களிலும் மொத்தம் 10,350 கிலோ தக்கைப்பூண்டு இருப்பு உள்ளது. மானிய விலையில் கிலோ ரூ.37க்கு வழங்கப்படுகிறது. அனைத்து விவசாயிகளும் இந்த அரிய வாய்ப்பபை பயன்படுத்தி தக்கைப்பூண்டை விதைத்து மண்ணின் வளத்தை நிலை நிறுத்தவும், கூடுதல் மகசூல் பெறவும் என  கலெக்டர் விஜயலட்சுமி,   தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED புதா.பழூர் அருகே அரசு அனுமதியின்றி மதுவிற்ற 2 பேர் கைது