×

கரூர்- சேலம் பைபாஸ் சாலையில் உள்ள நிழற்குடை டேங்கில் தண்ணீர் நிரப்பப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு

கரூர், ஏப். 24: கரூர் சேலம் பைபாஸ் சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள நிழற்குடையின் அருகில் உள்ள சின்டெக்ஸ் டேங்கில் தண்ணீர் நிரப்ப வேண்டும் என நிழற்குடி பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.கரூர் சேலம் இடையே பைபாஸ் சாலை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. பெங்களூர் முதல் கன்னியாகுமரி வரை செல்லும் அனைத்து வாகனங்களும் இந்த சாலையின் வழியாக செல்கின்றன.இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் கரூரில் இருந்து வேலாயுதம்பாளையம் வரையில், தளவாபாளையம், மூலிமங்கலம், புகளூர் போன்ற கிராமப்பகுதிகளுக்கு பிரியும் சாலையோரம் நிழற்குடை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கரூர், நாமக்கல், சேலம், மண்மங்கலம் போன்ற பகுதிகளுக்கு செல்வதற்காக நிழற்குடையில் காத்திருந்து பஸ் ஏறிச் செல்கின்றனர்.

நிழற்குடை அமைக்கும் போதே, அதன் அருகில், சின்டெக்ஸ் டேங்கும் அமைக்கப்பட்டது. சாலை பயன்பாட்டுக்கு வந்த ஒரு சில மாதங்கள் மட்டுமே, சின்டெக்ஸ் டேங்கில் தண்ணீர் நிரப்பப்பட்டது. அதற்கு பிறகு, தண்ணீர் நிரப்பப்படாமல் அனைத்து டேங்குகளும் காலியாகவே உள்ளது.சாலையின் வழியாக கார் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களில் பயணிக்கும் பொதுமக்கள் கடும் வெயில் காரணமாக, நிழற்குடைகளில் ஒய்வெடுத்துச் செல்கின்றனர். இந்நிலையில், டேங்கில் தண்ணீர் இல்லாமல் பெரும்பாலானோர் அவதிப்பட்டு வருகின்றனர்.எனவே, அதிகாரிகள் இதனை பார்வையிட்டு கோடை காலத்திலாவது டேங்கில் தண்ணீர் நிரப்ப தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்   என நிழற்குடை பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.



Tags : bypass road ,Karur ,Salem ,
× RELATED டிரைவர் மீது தாக்குதல்