×

தாந்தோணிமலை பகுதியில் கலங்கலாக வரும் குடிநீரால் மக்கள் அவதி

கரூர், ஏப். 24: கரூர் நகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை பகுதியில் கடந்த ஒரு மாதமாக விநியோகிக்கப்படும் குடிநீர் கலங்கலாக இருப்பதால் மக்கள் பயன்படுத்திட முடியாமல் அவதிப்படுகின்றனர்.கரூர் நகராட்சிக்குட்பட்ட கரூர், இனாம்கரூர் பகுதிகளுக்கு வாங்கல் மற்றும் நெரூர் பகுதி காவிரி ஆற்றுப்பகுதியில் இருந்தும், தாந்தோணிமலை, சணப்பிரட்டி ஆகிய பகுதிகளுக்கு கட்டளை காவிரி ஆற்றுப்பகுதியில் இருந்தும் நீரேற்று நிலையங்களம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.கடந்த சில ஆண்டுகளாக 15 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது வாரம் ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதிலும், தாந்தோணிமலை பகுதியில் கடந்த 1 மாதமாக விநியோகம் செய்யப்படும் குடிநீர் மண் கலந்த நிலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பயன்படுத்திட முடியாத நிலையில் தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதால் இதனை பயன்படுத்திட முடியாமல் பொதுமக்கள் அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். தொடர் மழைக்காலங்களில் மட்டுமே இதுபோல, கலங்கலாக தண்ணீர் வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால், சுட்டெரிக்கும் வெயில் வாட்டி வதக்கி வரும் நிலையிலும் குடிநீர் கலங்கலாக இருப்பதால், பல்வேறு தொற்று நோய்களால் பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. மேலும், நீரேற்று நிலையங்களில் இருந்து வெளிவரும் தண்ணீர் கலங்கலாக உள்ளதா? அல்லது தேக்கி வைக்கப்படும் தொட்டிகள் சுத்தம் செய்யப்படாமல் உள்ளதா? என்பது குறித்தும் தெரியாமல் உள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இனி வரும் காலங்களிலாவது விடப்படும் தண்ணீர் சுத்தமான தண்ணீராக விநியோகம் செய்வதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : area ,Tandonimali ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...