தாராசுரம் அரண்மனை குளத்தில் கழிவுநீர் கலப்பதால் துர்நாற்றம் பொதுமக்கள் அவதி

கும்பகோணம், ஏப். 24: தாராசுரம் பழைய சாலையில் உள்ள அரண்மனை குளத்தில் கழிவுநீர் கலப்பதால் ஏற்படும் துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் குளத்தை தூர்வாரி சீரமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

கும்பகோணம் அடுத்த தாராசுரத்தில் சத்திரம் நிர்வாகத்துக்கு உட்பட்ட அரண்மனை குளம் பல ஆண்டுகளுக்கு முன்பு பழமையானது. 25 ஆண்டுகளுக்கு முன்பு இக்குளத்தை அப்பகுதியில் உள்ளவர்கள் நீராடுவதற்கும், மற்ற பயன்பாட்டுக்கும் பயன்படுத்தி வந்தனர். அதன்பின்னர் போதுமான பராமரிப்பு செய்யாததால் குளத்தில் சாக்கடை நீர் கலந்து  துர்நாற்றம் வீசும் நிலை உருவானது.

தற்போது குப்பைகளை கொட்டும் இடமாகவும், குடியிருப்புகளில் உள்ள கழிவுநீர் விடும் குளமாக மாறிவிட்டது. இதனால் குளம் முழுவதும் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம்  புகாரளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். தற்போது கோடை விடுமுறை என்பதால் வீட்டில் இருக்கும் மாணவர்கள், குளத்தின் அருகில் விளையாடும்போது பாதுகாப்பு தடுப்புகள் இல்லாததால் குளத்தில் தவறி விழுந்தால்,அவர்களின் உயிர் கேள்விக்குறியாகிவிடும். எனவே அரண்மனை குளத்தை விரைந்து தூர்வாரி சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Related Stories: