×

நாச்சியார்கோவில் பகுதியில் பலத்த மழை

கும்பகோணம், ஏப். 24: கும்பகோணம் அடுத்த நாச்சியார்கோவில் பகுதியில் சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் மரக்கிளைகள் முறிந்து விழுந்தது. தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2 மாதமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் மேலும் அதிகமானதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வநதனர். இந்நிலையில் நேற்று காலை முதல் வழக்கத்துக்கு மாறாக கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சிறிது நேரத்தில் நாச்சியார்கோயில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பகல் ஒரு மணியளவில் பலத்த மழை பெய்தது.மழை பெய்தபோது பலத்த காற்று வீசியதால் 20க்கும் மேற்பட்ட முருங்கை மரங்கள் முறிந்து விழுந்தனர். போதிய வெளிச்சம் இல்லாததால் வாகன ஓட்டிகள் வாகனங்களின் முகப்பு விளக்கை எரியவிட்டவாறு சென்றனர். இந்த மழை ஒரு மணி நேரத்துக்கு மேலாக தொடர்ந்ததால் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியது.

கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் அடித்த வந்த நிலையில் நேற்று மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.கும்பகோணம் மற்றும் சுற்றுப்பகுதியில் பெய்துள்ள கோடை மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கும், சாகுபடி செய்யப்பட்டுள்ள பருத்தி செடிகளுக்கும், உளுந்து பயிர் உள்ளிட்ட அனைத்து வகையான பணப்பயிருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.சூறைக்காற்றால் மின்வயர்கள் அறுந்தது: தஞ்சை பகுதியில் நேற்று மாலை திடீரென பலத்த காற்று வீசியது. இதனால் தொல்காப்பியர் சதுக்கம் அருகே பிரகதாம்பாள் நகரில் உள்ள மின்சார ஒயர்கள் அறுந்து விழுந்தது. வெயிலின் தாக்கம் அதிகமாகவும் மாலை நேரம் என்பதால் மக்கள் நடமாட்டம் அப்பகுதியில் இல்லாததால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள், மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பின்னர் மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அறுந்து விழுந்த மின்சார வயர்களை சரி செய்தனர்.

Tags : area ,Nachiyarikovil ,
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...