×

இலங்கை குண்டு வெடிப்பு எதிரொலி வேதாரண்யம் கடலோர பகுதியில் போலீசார் தீவிர ரோந்து

வேதாரண்யம், ஏப். 24: வேதாரண்யம்  தாலுக்கா கடற்கரையோர கிராமங்களில் இலங்கையில் குண்டு வெடிப்பு சம்பவங்களின்  எதிரொலியாக கடந்த மூன்று நாட்களாக போலீசார் தீவிர கண்காணிப்பு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை   தினத்தன்று 8  இடங்களில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் 200க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஈஸ்டர் பண்டிகையையொட்டி  நடந்த இந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் இலங்கையில் அசாராதண சூழல்  ஏற்பட்டுள்ளது.  இதன் எதிரொலியாக தமிழகத்தின் கடலோர பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கைக்கு அருகாமையில் கோடியக்கரை இருப்பதால்  குண்டுவெடிப்பு சம்பந்தப்பட்ட தீவிரவாதிகள் கோடியக்கரை கடலோர பகுதி வழியாக  தமிழகத்துக்குள் ஊடுருவ வாய்ப்புள்ளதாக கருதி வேதாரண்யம், ஆறுகாட்டுதுறை  மணியன்தீவு, புஷ்பவனம், வௌ்ளப்பள்ளம், வேட்டைக்காரனிருப்பு, நாலுவேதபதி,  பெரியகுத்தகை, கோடியக்கரை  உள்ளிட்ட  கடலோர கிராமங்களில் கடலோர காவல்  குழும போலீசார் மற்றும் வேதாரண்யம் சட்ட ஒழுங்கு போலீசார் தீவிர ரோந்து  பணியில் ஈடுபட்டுள்ளனர்.  மேலும் கியூ பிராஞ் போலீசார் மற்றும் மத்திய  மாநில உளவுத்துறை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.   வேதாரண்யம் டிஎஸ்பி  ஸ்ரீகாந்த், கடலோர காவல் டிஎஸ்பி   களிதீர்த்தார், வேதாரண்யம் போலீசார் ஜெகதீஸ்வரன்  ஆகியோர் தலைமையில்  கண்காணிப்பு பணி நடந்தது.  வேதாரண்யம் கடற்கரை வழியாக சந்தேகத்துக்க  இடமளிக்கும் வகையில்  ஆட்கள் நடமாட்டம் உள்ளதா?  குண்டு வெடிப்பில்  தொடர்புடைய நபர்கள் யாரேனும் வேதாரண்யம் பகுதியில் வரவாய்ப்பு உள்ளதா?  என்பது பற்றி மீனவர்களிடம் தீவிரமாக  போலீசார்  விசாரித்து வருகின்றனர்.

Tags : Sri Lankan ,area ,Vedaranyam ,
× RELATED 7 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை