×

குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.9ஆயிரம் வழங்க வேண்டும் சத்துணவு ஊழியர்கள் வலியுறுத்தல்

வேதாரண்யம், ஏப்.24: குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும் என்று சத்துணவு ஊழியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.வேதாரண்யம் தாலுக்கா தகட்டூரில் தமிழ்நாடு சத்துணவு பணியாளர்கள் சங்க ஒன்றிய கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய தலைவர் ராமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மதிவாணன், ஒன்றிய பொருளாளர் கனிமொழி, செயலாளர் அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய தணிக்கையாளர் வீரமணி வரவேற்றார்.  சத்துணவு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் நூர்ஜஹான் சிறப்புரையாற்றினார்.  கூட்டத்தில் பணிமூப்பு அடிப்படையில் பணி உயர்வுக்கு தகுதியுள்ள சத்துணவு ஊழியர்களுக்கு பணி உயர்வு வழங்க வேண்டும். அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் சத்துணவு அமைப்பாளர்கள் சமையலர், சமையல் உதவியாளர் அனைவரையும் அரசு ஊழியராக்க வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு ஊதியக்குழுவால் வரையறுக்கப்பட்ட குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.9ஆயிரம் வழங்க வேண்டும். விலைவாசி உயர்வுக்கு ஏற்ப மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவூட்டு மானிய செவினத் தொகையை ரூ.5 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். மானங்கொண்டான் வேதாரண்யம் ஆற்றின் கடைமடை பகுதியான கோவில்தாவு பகுதியில் தடுப்பணை அமைத்து தண்ணீரை சேமிக்க வேண்டும். வேதாரண்யம் - திருத்துறைப்பூண்டி இடையிலான அகல ரெயில் பாதை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். நாகை மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன்,  பள்ளி தலைமையாசிரியர் ராமசாமி, மாவட்ட தலைவர் தேன்மொழி, செயலாளர் ராஜு, உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இணை செயலாளர் பழனிதுரை நன்றி கூறினார்.


Tags : Nutrition staff ,
× RELATED சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்