×

மயிலாடுதுறை நகராட்சியில் சிதிலமடைந்த மீன்விற்பனை கூடம் சீரமைக்க வேண்டும் வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை

மயிலாடுதுறை ஏப்.24: மயிலாடுதுறை நகராட்சியில் சிதிலமடைந்த மீன்விற்பனை கூடத்தை சீரமைக்க வேண்டும் என வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நாகை மாவட்டம் மயிலாடுதுறை நகரின் மையப்பகுதியில் ‘ஸ்லாட்டர்ஹவுஸ்’ வீதியில் ஆடுவதைக் கூடமும், மீன்விற்பனைக் கூடமும் இயங்கிவருகிறது. 40 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கே மீன்மார்க்கெட் இயங்கி வருகிறது. இந்த மீன்மார்க்கெட்டிற்கு வரும் மீன் விற்பனையாளர்களிடம் வரிவசூல் பொறுப்பை மயிலாடுதுறை நகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது.  ஏலம் விட்டு அதில் வருமானத்தை பார்த்து வருகிறது. 20க்கும் மேற்பட்ட கடைகள் இங்கே அமைக்கப்பட்டுள்ளது. மீன் விற்பனைக்கும் அவற்றை சுத்தம் செய்வதற்கும் அங்கே வசதி செய்யப்பட்டுள்ளது. ஆட்டுக்கறி மற்றும் மீன் வாங்க வருபவர்கள் மற்றும் மீன் விற்பனையாளர்கள் இயற்கை உபாதையை கழிப்பதற்கு மார்க்கெட்டின் கிழக்கு புறத்தில் கழிப்பறை கட்டப்பட்டுள்ளது.  கடந்த பல ஆண்டுகளாக இந்த மீன் மார்க்கெட்டின் வடபகுதியில் உள்ள மீன் விற்பனை செய்யப்படும் இடத்தின் மேற்கூரை முற்றிலும் சேதமாகிவிட்டது.

மழைகாலத்தில் மீன்விற்பனையாளர்கள் மழையில் நனைந்தபடியே மீன் விற்பனை செய்து வந்தனர். நகராட்சி அதிகாரிகளிடம் எடுத்துக் கூறியும் எந்த நடவடிக்கையும் இல்லை. அதேபோல மார்க்கெட்டின் கீழ்புறத்தில் உள்ள கழிப்பறையில் அதனை உபயோகப்படுத்த தண்ணீர் வசதி செய்யப்படவில்லை, இதுகுறித்தும் நகராட்சி அதிகாரிகளிடம் எடுத்துக்கூறியும் எந்தவித முன்னேற்றமும் இல்லை. தற்பொழுது வெயில் காலம் என்பதால் மீன்விற்பனைக் கூடத்தில் உட்கார முடியாமல் தவித்து வருகின்றனர். மீன் வாங்க வருபவர்களும் மீன் விற்பனை செய்பவர்களும் சொல்லமுடியாத துன்பத்தை அனுபவித்து வருகின்றனர். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் சென்ற மாதம் எடுத்துக்கூறியபோது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். ஆனால் இதுநாள்வரை மேற்கூரை போடப்படாமல் அப்படியே கிடக்கிறது. மீன்விற்பனையகம் எலும்புக் கூடாகி கருவாடாக காட்சித் தருகிறது. அதிகாரிகள் இதனை பார்வையிட்டு உடனே நடவடிக்கை எடுத்து உறுதியான மேற்கூரையும் கழிப்பறைக்குத் தேவையான தண்ணீர் வசதியையும் செய்துதர வேண்டுமென மீன் வியாபாரிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Meriaduthurai ,fisheries house ,
× RELATED திரளான பக்தர்கள் தரிசனம் உலக பூமி...