×

திருவண்ணாமலை, ஆரணி தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு கேமரா காட்சிகள் பதிவு வேட்பாளர்கள், முகவர்கள் பார்வையிட ஏற்பாடு

திருவண்ணாமலை, ஏப்.24: திருவண்ணாமலை மற்றும் ஆரணி மக்களவை தொகுதி வாக்கு எண்ணும் மையங்களில் பதிவாகும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது.திருவண்ணாமலை மார்க்கெட் கமிட்டியில் திருவண்ணாமலை மக்களவை தொகுதிக்கும், சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆரணி மக்களவை தொகுதிக்கும் வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம் 23ம் தேதி நடைபெற உள்ளது.இதனால், இரண்டு தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும், இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அறைகளில் வைத்து 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும், மதுரையில் வாக்கு எண்ணும் மையத்துக்குள் பெண் தாசில்தார் நுழைந்த சம்பவத்தை தொடர்ந்து, அனைத்து வாக்கு எண்ணும் மையங்களுக்கும் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதேபோல், கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கு அனுமதியளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

அதன்படி, திருவண்ணாமலை மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையங்களில் பொருத்தப்பட்ட சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளை, அங்குள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பார்வையிட தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.இந்த, கட்டுப்பாட்டு அறையில் இருந்து 24 மணி நேரமும் வேட்பாளர்கள் அல்லது அவர்களுடைய அங்கீகாரம் பெற்ற முகவர்கள் பார்வையிடலாம். அதற்கான, அடையாள அனுமதி அட்டை சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி மூலம் வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில், வாக்கு எண்ணும் மையங்களில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை பார்வையிட வேட்பாளர்கள் மற்றும் முகவர்களிடம் ஆர்வம் குறைவாக உள்ளது. ஒருசில முகவர்கள் மட்டுமே சில மணி நேரம் காத்திருந்து பார்வையிடுகின்றனர். ஒரு சிலர், பார்வையாளர் பதிவேட்டில் கையெழுத்திட்டு சென்று விடுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

Tags : Thiruvannamalai ,counting centers ,Arani ,
× RELATED வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல்...