×

செங்கம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் அரசு பஸ்சை சிறைபிடித்ததால் பரபரப்பு

செங்கம், ஏப்.24: செங்கம் அருகே குடிநீர் கேட்டு அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.செங்கம் அடுத்த தாழையூத்து கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கோடை வெயிலின் தாக்கத்தால் செங்கம் பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது. இதனால் தாழையூத்து கிராம ஊராட்சி சார்பில் குடிநீர் விநியோகிக்கப்படும் கிணறும் வறண்டுள்ளது. இந்நிலையில், செங்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள 44 கிராமங்களுக்கு சாத்தனூர் அணையிலிருந்து கூட்டு குடிநீர் திட்டம் மூலமாக பைப் லைன் அமைத்து குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. ஆனால், சாத்தனூர் அணைக்கு அருகே உள்ள தாழையூத்து கிராமத்திற்கு சாத்தனூர் கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து குடிநீர் வழங்கவில்லை.

இதுகுறித்து அதிகாரிகள், கிராம ஊராட்சி செயலாளர் ஆகியோரிடம் கிராம மக்கள் பலமுறை முறையிட்டும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் பெண்கள் நேற்று காலை 9 மணியளவில், காலிக்குடங்களுடன் செங்கம்- தாழையூத்து சாலையில் அரசு பஸ்சை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு பிடிஓ சஞ்சீவ்குமார், தாசில்தார் பார்த்தசாரதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து, குடிநீர் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Tags : bus stop ,Senthil ,
× RELATED ஈரோட்டில் குறைந்த கட்டணத்தில் உடனடி...