×

அண்ணாமலையார் கோயில் குளங்களில் மீன்கள் செத்து மிதப்பதால் துர்நாற்றம் பக்தர்கள் வேதனை

திருவண்ணாமலை, ஏப்.24: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் குளங்களில் மீன்கள் செத்து மிதப்பதால் ஏற்படும் துர்நாற்றத்தால் பக்தர்கள் வேதனை அடைந்தனர்.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் 4ம் பிரகாரத்தில் பிரம்ம தீர்த்தமும்(குளம்), 5ம் பிரகாரத்தில் சிவகங்கை தீர்த்தமும் உள்ளது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை காரணமாக இந்த குளங்களில் இறங்கவும், புனித நீராடவும் அனுமதியில்லை. மேலும், இரண்டு குளங்களை சுற்றிலும் இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. சுவாமி தீர்த்தவாரி நடைபெறும்போது மட்டும் சிவாச்சாரியார்கள் மற்றும் கோயில் ஊழியர்கள் குளத்துக்குள் இறங்குவது வழக்கம்.இந்நிலையில், சிவகங்கை தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் ஆகியவற்றை முறையாக பராமரிக்காததாலும், கும்பாபிஷேகத்தின்போது தீர்த்தங்களில் உள்ள நீரை முழுமையாக வெளிேயற்றி, மறுசீரமைப்பு செய்ய தவறியதாலும், தண்ணீர் முழுவதும் பாசி படர்ந்து, பச்சை நிறத்தில் கழிவுநீர்போல மாறிவிட்டது.

இந்நிலையில், பிரம்ம தீர்த்தம் மற்றும் சிவகங்கை தீர்த்தம் ஆகியவற்றில் நேற்று மீன்கள் செத்து மிதந்ததை பார்த்து பக்தர்கள் வேதனை அடைந்தனர். குறிப்பாக, சிவகங்கை தீர்த்தத்தில் அதிக எண்ணிக்கையிலான மீன்கள் செத்து மிதந்தன. அதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியது. அவற்றை உடனடியாக அகற்றவும் கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.கடந்த சில நாட்களாக 104 டிகிரிவரை வெயில் சுட்டெரித்ததால், அதன் வெப்பம் தாங்காமல் மீன்கள் செத்திருக்கலாம் என்றும், சுமார் 6 மாதத்துக்கு பிறகு நேற்று முன்தினம் இரவு பெய்த திடீர் மழையால், இரண்டு தீர்த்தங்களுக்கும் கால்வாய்கள் வழியாக கழிவுநீர் வந்ததால் மீன்கள் இறந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.மேலும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, இதேபோல் கோடைகாலத்தில் சிவகங்கை தீர்த்தத்தில் மீன்கள் செத்து மிதந்து குறிப்பிடத்தக்கது.

Tags : Annamalaiyar ,
× RELATED சித்திரை வசந்த உற்சவ விழா நிறைவு...