திருப்பத்தூரில் பரபரப்பு சடலத்தை வாங்க மறுத்து அரசு மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை ரயில் முன் பாய்ந்து தொழிலாளி தற்கொலை

திருப்பத்தூர், ஏப்.24: திருப்பத்தூரில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட தொழிலாளியின் சடலத்தை வாங்க மறுத்து, அரசு மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.திருப்பத்தூர் செவ்வாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெகன்நாதன்(45), விவசாய கூலித்தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். கடந்த 18ம் தேதி நடந்த மக்களவை தேர்தலின்போது, அதே பகுதியை சேர்ந்த வேலம்மாள் என்பவரது வீட்டின் அருகே வரையப்பட்டிருந்த அரசியல் கட்சி சின்னத்தை ஜெகன்நாதன் அழித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, வேலம்மாள் கந்திலி ேபாலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் ஜெகன்நாதனிடம் விசாரித்தனர். மேலும், நேற்று முன்தினம் மாலை போலீசார், ஜெகன்நாதனின் மனைவியிடம், ‘நாங்கள் அழைக்கும்போது உங்கள் கணவர் விசாரணைக்கு ஆஜராகவேண்டும், தவறினால் வழக்கு விசாரணையை வேலூருக்கு மாற்ற வேண்டியிருக்கும்’ என கூறினார்களாம்.

தகவலறிந்து அச்சமடைந்த ஜெகன்நாதன், நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து வெளியேறி, செவ்வாத்தூர் அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில், நேற்று மதியம் 12 மணியளவில் ஜெகன்நாதனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். இதையறிந்த திருப்பத்தூர் டிஎஸ்பி தங்கவேலு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.அப்போது, உறவினர்கள் கூறுகையில், ‘ஜெகன்நாதனின் சாவில் மர்மம் உள்ளது. போலீசார், வேலம்மாளின் மகன்களான எத்திராஜ், முருகன், மாதேஸ்வரன் ஆகியோரது மிரட்டலால்தான் தற்கொலை சம்பவம் நடந்துள்ளது. எனவே, இவர்கள் அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கும்வரை சடலத்தை வாங்க மாட்டோம்’ என்றனர். இதற்கு டிஎஸ்பி தங்கவேலு, உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையேற்று, பிரேத பரிசோதனை முடித்த ஜெகன்நாதனின் சடலத்தை பெற்று மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 1 மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: