தேர்தலில் பணம் பட்டுவாடா ஆலோசனை வாணியம்பாடி அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீது வழக்கு

வாணியம்பாடி, ஏப்.24: வாணியம்பாடி அருகே தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவது தொடர்பாக ஆலோசனை செய்த முன்னாள் அதிமுக எம்எல்ஏ கோவி.சம்பத்குமார் மீது போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.வேலூர் மக்களவை தொகுதி அதிமுக சார்பில் புதிய நீதிக்கட்சி வேட்பாளராக போட்டியிட்ட ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து வாணியம்பாடி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட ஆலங்காயம் கல்லரைப்பட்டி கிராமத்தில் கடந்த 14ம் தேதி தேர்தல் பிரசாரம் நடந்தது. அப்போது, கிராமத்தில் உள்ள ஒரு புளியமரத்தடியின் கீழ், வாணியம்பாடி தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ கோவி.சம்பத்குமார், வாக்காளர்களுக்கு வீடு, வீடாக பணம் வழங்குவது குறித்து கும்பலாக அமர்ந்திருந்த தொண்டர்களுக்கு ஆலோசனை வழங்கினார். இந்த வீடியோ பதிவு, பேஸ் புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து, முன்னாள் எம்எல்ஏ கோவி.சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்குமாறு, வாணியம்பாடி தாலுகா போலீசில், தாசில்தார் முருகன் கடந்த 17ம் தேதி புகார் செய்தார்.

ஆனால், இந்த வழக்கு தேர்தல் ஆணையம் சம்பந்தப்பட்டது என்பதால் வழக்குப்பதிவு தொடர்பாக வாணியம்பாடி நீதிபதி கலைமுத்து செல்வனிடம் அனுமதி கேட்டு போலீசார் உத்தரவு பெற்றனர். பின்னர், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த புகாரின்பேரில் 3 பிரிவின் கீழ் முன்னாள் எம்எல்ஏ கோ.வி.சம்பத்குமார் மீது நேற்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: